Type Here to Get Search Results !

ஆகஸ்ட் 25

👉 கிருபானந்த வாரியார் பிறந்த தினம்

👉 ஜேம்ஸ் வாட் நினைவு தினம்


🌷 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதர் நீல்ஆம்ஸ்ட்ராங் மறைந்தார்.

🌷 1981ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி வொயேஜர் 2 விண்கலம் சனிக்கு மிக அருகில் சென்றது.

🌷 1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி வொயேஜர் 2 விண்கலம் நெப்டியூனுக்கு அருகில் சென்றது.

🌷 1609ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி கலிலியோ கலிலி தனது முதல் தொலைநோக்கியை அறிமுகப்படுத்தினார்.

🔋 1867ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி இங்கிலாந்தை சேர்ந்த அறிவியல் அறிஞர் மைக்கல் பாரடே மறைந்தார்.

🌷 1908ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி கதிரியக்கத்தை கண்டுபிடித்த ஹென்றி பெக்கெரல் மறைந்தார்.


கிருபானந்த வாரியார்

✋ சுவாரஸ்யமான, எளிய நடையில் ஆன்மிகக் கருத்துகளை பரப்பிய திருமுருக கிருபானந்த வாரியார் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரில் பிறந்தார்.

✋ இவருடைய தந்தை ஒருமுறை, தான் ஒப்புக்கொண்ட சொற்பொழிவுக்கு செல்ல இயலாததால், இவரை அனுப்பி வைத்தார். மடைதிறந்த வெள்ளமாகப் பெருக்கெடுத்த 18 வயது இளைஞனின் சொல்லாற்றல் அவையோரை மெய்மறக்கச் செய்தது. இவருக்கு முதல் சொற்பொழிவே பேரும் புகழும் பெற்றுத் தந்தது.

✋ குழந்தைகளுக்கு தாயின் பெயரை முதலெழுத்தாகப் போட வேண்டும் என்பதை முதன்முதலாகக் கூறியவர் இவர்தான். எம்.ஜி.ஆருக்கு பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை சூட்டியது இவர்தான். ஆன்மிக அறப்பணிகளுக்காக ஏராளமான விருதுகள் பெற்றவர். இவருக்கு சென்னை தமிழிசை மன்றம் இசைப் பேரறிஞர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

✋ வாழ்நாள் முழுவதும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் மூலம் பக்தி, நன்னெறியை மக்களிடையே வளர்த்தார். சிவனருட்செல்வர், கந்தவேல் கருணை, ராமகாவியம், மகாபாரதம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நூல்கள், 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.

✋ செந்தமிழ்க் கடல், அருள்மொழி அரசு, திருப்புகழ் ஜோதி என்றெல்லாம் போற்றப்பட்ட திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் 87வது வயதில் (1993) விமானப் பயணத்தின் போது மறைந்தார்.


ஜேம்ஸ் வாட்

🌷 பல கண்டுபிடிப்புகளை உருவாக்கிய ஜேம்ஸ் வாட் 1736ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார்.

🌷 இவருக்கு சிறு வயதில் இருந்தே வரைவதில் ஆர்வம் அதிகம். 18 வயதில் லண்டனில் கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சி பெற்றார். பின்பு இயந்திரங்கள் தயாரிக்கும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

🌷 இவருக்கு 1764ஆம் ஆண்டு தாமஸ் நியூகாமன் என்பவரின் நீராவி இயந்திரத்தைப் பழுது பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை மாற்றம் செய்தார். இந்த மாற்றங்களால் இயந்திரத்தின் சக்தி பல மடங்கு பெருகியது. அதற்கு காப்புரிமையையும் பெற்றார்.

🌷 இவர் இயந்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும் சென்ட்ரிஃபியூகல் கவர்னர் கருவி, அழுத்தமானி, பொருள் அளவு, விசை, வேகம், தொலைவு ஆகியவற்றை பதிவு செய்யும் கருவி, நீராவியைக் கட்டுப்படுத்தும் த்ராட்டில்-வால்வு ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளார்.

🌷 இவர் பொறியாளர் மேத்யூ போல்டனுடன் இணைந்து பல்வேறு நீராவி இயந்திரங்களைத் தயாரித்துள்ளார். எனவே தொழிற்புரட்சிக்கு வித்திட்ட நாயகர் என்று உலகம் இவரைப் போற்றியது. மின்சாரம் கணக்கிடும் அளவுமுறைக்கு வாட் என இவரது பெயரே சூட்டப்பட்டது. ஹார்ஸ் பவர் (குதிரைத் திறன்) என்ற அளவு முறையை உலகுக்குத் தந்தவர் இவரே.

🌷 இயற்கையான நீராவி சக்தியை கொண்டு மகத்தான பல கண்டுபிடிப்புகளை உருவாக்கிய ஜேம்ஸ் வாட் 1819ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி 83 வயதில் (1819) மறைந்தார்.