Type Here to Get Search Results !

மேரி க்யூரி

நோபல் குடும்பம்

உலகின் ஆக உயரிய கெளரவமாகக் கருதப்படும் நோபல் பரிசை ஒருமுறை வெல்வதே அரிது. ஆனால், குடும்பம் ஒட்டு மொத்தமும் நோபல் பரிசுகளை அள்ளிச் சென்றுள்ளது என்றால் அது மேரி கியூரியின் குடும்பம் மட்டுமே. ஆம், அவரின் இல்லத்தில் மேரி கியூரி, கணவர் பியரி கியூரி, மகள் ஐரீன் மற்றும் மருமகன் பிரெடரிக் ஜோலியட் என நால்வர், நோபல் பரிசை அள்ளிக் கொண்டனர். நமக்கு வியப்பில்  விழிகள் விரிகின்றன. நோபல் பரிசாளர்கள் பட்டியலில் முதன் பெண் மேரி கியூரி; இரண்டாம் நோபல் பரிசு பெற்ற பெண், மேரியின் மகள் ஐரீன் தான்.

ஒருவரே..இரண்டு நோபல் பரிசுகள்

நூறாண்டு அறிவியல் வரலாற்றில் முதன்முறையாக நோபல் பரிசை இரண்டு முறை வென்றவர் மேரி கியூரி மட்டுமே. இயற்பியல் மற்றும் வேதியியல் என இரண்டு வேறு துறைகளில், சாதனையை நிகழ்த்தியவர் மேரி கியூரி. பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படாத அந்தக் காலத்தில் 19 ஆம் நூற்றாண்டில் பிறந்து கலை, அறிவியல் துறைகளில் பெண்களால் சாதிக்க முடியாது என்று கருதப்பட்ட காலத்தில் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அறிவியல் ஆண்களின் தனிச்சொத்து என்று இறுமாப்புடன் இருந்த காலத்தில் நோபல் பரிசு பெற்று மாபெரும் சாதனை நிகழ்த்தியவர் மேரி கியூரி. வாய்ப்பு வழங்கப்பட்டால் ஆண்களுக்கு நிகராக சாதிப்போம் அல்லது ஆண்களையும் மிஞ்சுவோம் என்று ஒவ்வொரு பெண்ணையும் நிமிரச் செய்தவர்தான் அறிவியல் மேதை மேரி கியூரி. சிறுவயது முதலே பெண்களை அடக்கி வைக்கும் பொதுப் புத்திக்கு எதிராக யோசிப்பவராக இருந்தார்.

உடைக்கமுடியாத சாதனை

அவரது வாழ்நாளில் பாலின தடைகளை உடைத்து நொறுக்கியவர் மேரி கியூரி. பிரான்சில் கையில் பைசா இல்லாமல் நுழைந்த மரியா என்ற போலிஷ் பெண், 20 ஆம் நூற்றாண்டின் சரித்திரத்தையே புரட்டிப் போட்டு, பிரெஞ்சு நாட்டின் மிகச் சிறந்த ஆளுமையான விஞ்ஞானி என்று போற்றப்பட்டு கொண்டாடப்படுகிறார். நவீன இயற்பியலின் தடைகளை உடைத்த அன்னை என மேரி கியூரி அறிவியல் உலகால் கொண்டாடப்படுகிறார். இவரது அறிவியல் சாதனையை, அவரது வாழ்நாள் சமூக கள சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை.

மேரியின் பிறப்பு: போலந்து நாட்டில் 1867 , நவம்பர் 7 ம் நாள் வார்சா என்ற ஊரில், "மரியா ஸ்க்லடவ்ஸ்கா" (Maria Salomea Skłodowska) என்னும் பெயருடைய மேரி கியூரி ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை வ்லேடிஸ்லாவா (Skłodowski) ஓர் இயற்பியல் மற்றும் கணித  ஆசிரியர். கடவுள் மறுப்பாளரும்கூட. அன்னை பிரோநிஸ்லாவா(Bronisława). இவரும் பிரபலமான ஆசிரியர். மேரி கியூரியின் அன்னை ஓர் உறைவிடப் பள்ளியை நடத்தி வந்தார். பள்ளியின் தலைமைப் பொறுப்பிலும் இருந்தார். மேரி பிறந்த பின்னர், அந்த வேலையை மேரியின் அன்னை பிரோநிஸ்லாவா விட்டுவிட்டார். 

வாழ்க்கைக்கான போராட்டமும் பசியும் கல்வியும்

மரியா ஸ்க்லடவ்ஸ்கா என்னும் மேரி குடும்பத்தில் கடைசி ஐந்தாவது குழந்தை. அவளுக்கு மூன்று சகோதரிகள்; ஒரு சகோதரன். மூத்தவள் பெயர், பிரானிஸ்லாவா. மேரிதான் கடைக்குட்டி ;எல்லாப் பிள்ளைகளை விடவும், சிறு வயதிலேயே மேரி மிக்க அறிவோடு காணப்பட்டாள். போலந்தின் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் மரியாவின் தாய்வழி மற்றும் தந்தை வழி குடும்பங்கள் தொடர்ந்து பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டதனால், அவர்களின் செல்வம் கரைந்தது. எதிர்காலம் சிக்கலானது. அவரது தந்தை பதவியிறக்கம் செய்யப்பட்டார். குடும்பம் வறுமையில் தத்தளித்தது. மரியா மற்றும் அவரது மூத்த சகோதர சகோதரிகள் வாழ மிகவும் அல்லல் பட்டனர். பட்டினி கிடந்தனர். இந்த சூழலில், வாழ்க்கைக்கான போராட்டம் அவர்களுக்கு வெல்ல முடியாமல் இருந்தது. மரியாவுக்கு 8 வயதில், அவரது தமக்கை சோபியா டைபாய்டு நோய் வந்து இறந்தார். அம்மாவுக்கு காசநோய்; பிள்ளைகளை தொட்டு தூக்கவே மாட்டார். மேரி கியூரிக்கு  12 வயதில், அன்னையை காசநோயின் கொடிய கரங்கள் கொண்டு போயின. தமக்கை மற்றும் அன்னையின் இழப்பால் மேரி கடவுள் நம்பிக்கையை இழந்தார். அன்னையின்  இறப்பால் மேரி  உறைவிடப் பள்ளியில் இருந்தே படித்தார்.  சிறுவயதில்  மேரிக்கு அற்புதமான நினைவுத்திறனும் அறிவுத்திறனும் இருந்தது. 

கோலோச்சிய ரஷ்ய அரசு

அப்போது போலந்து நாடு ரஷ்ய ஜார் மன்னனின் கட்டுப்பாட்டில்  இருந்தது. மேலும், போலந்து மக்கள் தனது நாட்டின் மொழியையோ, கலாசாரத்தையோ கற்றுக்கொள்ளக் கூடாது என ஆணயிட்டு இருந்தார். ஆனால் போலந்து நாட்டின் தேசப்பற்றாளார்கள், எப்படியும் போலந்தை ஜாரின் பிடியிலிருந்து மீட்டே தீருவோம் என சபதம் எடுத்து, போலிஷ் மொழியை ரகசியமாகவே படித்தனர். இதற்கான ஆயத்தப் பணிகளில் மேரியின் தாய், தந்தை இருவருமே ஈடுபட்டனர். போலந்தின் விடுதலைக்காக மாணவர் இயக்கங்களில்  மேரி இணைந்து பணியாற்றி இருக்கிறார். வீட்டில் வறுமை வாட்டவே தன் தந்தையின் உறவினர்கள் வீட்டில் வேலைக்காரியாக  பணி செய்து குடும்பத்தின் துயரைத் துடைத்தார். அவர் ஒருவரை விரும்பினார். ஆனால் மேரியின் உள்ளத்தில் அரும்பிய காதலை ,”நீ வேலைக்காரி ” உன் குடும்பம் தரமற்றது  என்று சொல்லி காதலை நிராகரித்துவிட்டனர்.

ஏழ்மையிலும் கல்வியில் மின்னிய மேரி 

மேரி தனது 15 வது வயதில், ரஷ்யப் பள்ளியில், பள்ளி இறுதி நிலையில் தங்கப் பதக்கம் பெற்றார். மேலே அதிகமாக அறிவியல் படிக்க எண்ணியும் கூட குடும்பச் சூழல் அதற்கு இடம் தரவில்லை. அவர் முன்னே இரு பெரும் பிரச்னைகள் பூதமாக நின்றன. ஒன்று, மேரி பல்கலைக்கழகத்தில் படிக்க தந்தையிடம் போதுமான பணம் இல்லை. இரண்டு, பெண்களுக்கான மேற்படிப்பு போலந்து நாட்டில் இல்லை. தீவிர சிந்தனைக்குப் பின்னர் ஒரு முடிவு எடுத்தார். அதுதான் தமக்கையை தான் படிக்க வைப்பது.

தமக்கைக்காக தன் படிப்பைத் துறந்து..

மேரி, தனிக் குடும்பங்களில் வாழும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார். உயர்நிலைப் பள்ளியை 15 வயதில் முடித்தபின், மேரி ஆறு ஆண்டுகள்(1885- 1891) ஓர் இல்லத்தில் தணிக்கை பெண்ணாக(Governess) வேலை செய்து பணம் சேர்த்து, முதலில் அக்கா  பிரானியா, பிரான்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற உதவினர். அவரது அக்கா பாரிசுக்குப் போய் மருத்துவம் படித்தார். ஆனால் மேரி உயர்கல்வியை எளிதாகப் படிக்க முடியவில்லை. ஆனாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம், படித்தார். அறிவுப் பசி தீர்க்க கணிதம், இயற்பியல் மற்றும் வேதியல் என படித்து படித்துத் தள்ளினார். 

தமக்கை மூலம் தொடரும் கல்வி

தமக்கைக்காகவும்,  தனது எதிர்கால படிப்புக்காகவும், மேரி இரண்டு வருடங்கள்  பணிபுரிந்து பணம் சேர்த்தார். பின்னர் அங்கேயே போலிஷ் மாணவர்களுக்கு நடத்தப்படும் ஒரு சட்டத்திற்கு புறம்பான ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அறிவியல் உரைகளைக் கேட்டார்; ஆய்வக செயல்முறைகளையும் செய்தார். போலிஷ் கலாசாரம் கற்றுக்கொள்வதும், ஆய்வக அறிவியலையும் செய்வது ரஷ்ய அதிகாரிகளுக்கு பிடிக்காதது. யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே மேரி செய்தார். பறக்கும் பள்ளிக்கூடங்களில் சத்தமே இல்லாமல் படித்தார் மேரி.

பிரான்சில் மேரியின் நிலை

பின்னர் 1891, நவம்பரில்  மேரி தனது 24ம் வயதில்  மேற்படிப்புக்காக பிரான்ஸ் போனார்.  மான்யா என்ற போலிஷ் பெண் மரியாவாக மாறிய இடம்தான் பிரான்சின் சோர்போன் நகரம். இந்த நிகழ்வு 1891ல் மரியா படிப்பதற்காகபதிவு செய்த போது நடந்தது. அங்கேதான் அவரது தமக்கை புரோன்யா தான் விரும்பிய காசிமிர் ட்லுஸ்கி என்ற போலிஷ் தேசபக்தரை திருமணம் செய்து வாழ்ந்தார். அவரது இல்லம் பல்கலைக்கழகத்திலிருந்து குதிரை பூட்டிய பஸ்ஸில் செல்லும் தூரமாக இருந்தது. மேரி இதற்கான நேரத்தையும் பணத்தையும் இழக்க விரும்பாமல், தமக்கையின் கணவர் ஒரு போலிஷ் என்பதால், மேரியின் தந்தைக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. இது மேரியின் எதிர்காலத்தை பாதிக்கும் என அவரின் தந்தை எண்ணினார். எனவே, மகளை விலகியே இருக்கும்படிசொன்னார்.

பிரான்சிலும் வறுமையும் படிப்பும்

பிரான்சில் பிரானியா வேலையில் சம்பாதித்து, மேரியின் மேற்படிப்புக்கு உதவினார். அங்கேயும் மேரியின் வறுமை துரத்தியது. பசியோடும், பட்டினியோடும் வறுமையோடும் போராடிக்  கொண்டே ஆய்வுகள் செய்தார். அவர் படித்த பல்கலைக்கழகம் மிகவும் மதிப்பு பெற்ற பல்கலைக்கழகம். அங்கே வேதியல், இயற்பியல், மற்றும் கணிதம் இவைகளை பிரெஞ்சு மொழியிலேயே போதித்தனர். மேரியின் திறமையால், அவர் வெகு விரைவில் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொண்டு, லாவகமாக அதனைக் கையாண்டார்.  உடன் பயிலும் அனைத்து மாணவர்களையும்விட அதிகம் உழைத்து மேன்மையுற வேண்டும், இதில் பசியோ, பட்டினியோ, உடையோ, சூழலோ எதுவும் கல்வியில் குறுக்கிடக்கூடாது என தெளிவாக முடிவு எடுத்தார்.

பாரிஸ் கல்வியும் பட்டினியின் கோரப் பிடியும்

பாரிசில் கொஞ்ச காலம் மட்டுமே, மேரி தமக்கை மற்றும் அவரின் கணவருடன் இருந்தார். பின் மேரி , தனியாக வீடு எடுத்து தங்கினார். ஐரோப்பாவில் எப்போதும் குளிர்காலத்தில் பனிப்பொழிவு வாட்டி வதைக்கும். வறுமை மிகுந்த  மேரிக்கு குளிர்காலமும் கொடுமை இழைத்தது. பாரிஸ் கடுங்குளிரில் சரியான உணவு, உடை இல்லாமல், பாழடைந்த தங்குமிடத்தில் மேரி சிரமத்தோடு படித்தார்.  சூடாக்கப்படாத  அந்த அறை அவரின் எலும்புக்குள் குளிரை ஈட்டியாய்  பாய்ச்சியது. உடல்  விறைத்தது. மாதம் 100 பிராங்க் நிதித் திட்டத்தில், பணம் பற்றாமல் பல நாட்கள் பட்டினியுடனும், வெறும் ரொட்டி, சாக்லெட், சிறு பழத்தைத் தின்றார். சில நேரங்களில் மேரி பசியினாலும் கூட மயங்கி   விழுந்திருக்கிறார். அங்கே காலையில் கல்வி; மாலைகளில் பயிற்சி வகுப்பு எடுத்து சம்பாதித்து கல்வி பயின்றார்.அத்துணை பாதிப்பு ஏற்பட்டாலும் படிப்பை பாதிக்கவிடவில்லை மேரி. கல்வியின் மேல் அத்துணை பிடிப்பும், வைராக்கியமும் கொண்டிருந்த கொள்கைப் பிடிப்பாளர், மேரி கியூரி.

கல்வி, மேலும் கல்வி..

மேரியின் விடாமுயற்சி அவருக்கு கைகொடுத்தது. 1893ம்  ஆண்டு கோடையில் இயற்பியல் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து கணிதம்; இதற்கிடையில் பணம் இல்லா பிரச்சினை, கல்வியின் குறுக்கே மலை போல வந்து நின்றது. பிரான்சில் இருந்த சில விஞ்ஞானிகள் அவருக்கு கல்வி உதவித்தொகையை ஒரு சிறப்பு மாணவராக கருதி வழங்கினர்.அத்துணை ஏழ்மையிலும், 1893 கோடையில், மேரி 26 ஆம் வயதில், பல்கலைக் கழகத்தில், 1893 ஆம் ஆண்டின் முதல் மாணவியாக எம்.எஸ்சி. இயற்பியலில் .பட்டம் பெற்றார்; பின்னர், மேரி பேராசிரியர், காபிரியல் லிப்மான்( Gabriel Lippmann) என்பவரின் ஆய்வகத்தில் வேலை பார்த்தார். 1894ம் ஆண்டு  எம்.எஸ்சி. கணிதத்திலும் பட்டம் பெற்றார். இதிலும் முதல் மாணவர்; அவரின்  கிரீடத்தில் இன்னொரு வெற்றிச் சிறகு குடிஏறியது.

ஆய்வகமும் பியரியின் சந்திப்பும்

மேரி கணிதம் படித்து முடிக்கும் முன்பே, அவருக்கு தேசிய தொழிற்சாலை மூலம் பண உதவி பெற்றார். அவரது ஆய்வுகளுக்கு தனி ஆய்வுக்கூடம் தேவைப்பட்டது . 1894ல் வேதியல் மேற்பட்ட படிப்பை முடித்தார். 1894ல் இயற்பியலும் வேதியலும் போதிக்கும் பேராசிரியர் பியரி கியூரியை , மேரிக்கு அவரது போலிஷ் இயற்பியல் பேராசிரியர் கௌன்ட் ஜோஸ் வைருஸ் கௌவால்ஸ்க் (Count Józef Wierusz-Kowalsk)  அறிமுகப் படுத்துகிறார். மேரியின் வாழ்க்கையில் புதுவரவு பியரி கியூரி அவரின் உள்ளத்திலும், .மேரியின் ஆய்வகத்துக்கு உதவ மேரிக்கு அப்போதே பியரியை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அப்போது மேரியின் மனதிற்குள்,  தான் முதன்முதலில் பியரியை சந்தித்த கணங்கள் நினைவுக்கு வருகின்றன. ஒருநாள் இங்கே நான் உள்ளே நுழையும்போது  பியரி அமைதியாக ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அவருக்கு வயது 35. இளமையாகவே தெரிந்தார். திறந்த மனதுடன் இருக்கும் அப்பாவியான முகம். அவரின் எளிமை, புன்னகை,தன்னம்பிக்கை எல்லாமே முகம் வழியே தெரிந்தது, என மனதுள் பதிவு செய்ததை மீண்டும் தன்னுள்  நினைவூட்டுகிறார் மேரி.

மேரியை மறுத்த போலந்து பல்கலைக்கழகம்

எப்போதும் அன்னை தேசம் போலந்தின், நினைவு மேரியை படுத்தியது. அங்கு சென்று பணிபுரிய விரும்புகிறார் மேரி. பணிபுரிவதற்கான கல்வித் தகுதியும் பெற்றாகிவிட்டது. வீட்டு நினைவு வேறு வாட்டியது. மேரி போலந்துக்கு விடுப்பு எடுத்து செல்லும்போதெல்லாம் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் வேலை தேடினார். போலந்தின் கிரகோவ் பல்கலைக்கழகம். அவர் பெண் என்பதால் நிறைய மதிப்பெண் எடுத்து தங்க மெடல் பெற்ற பின்னரும்கூட கறாராக வேலை தரமறுத்துவிட்டது. போலந்து மேரிக்கு படிப்பும்  தரவில்லை. பணியும் தரவில்லை. வேதனையில் ஆழ்கிறார்.

காதலாக பரிணமிக்கும் உதவி

பியரி எழுதிய ஆறுதலான கடிதம்தான் அப்போது மேரியை பாரிஸ் நோக்கி வரவழைத்தது. மேரி மீண்டும் பாரிசில் 1894ல் ஆராய்ச்சிக்கு பதிவு செய்தார். மேரிக்கு ஆய்வு செய்ய ஒரு ஆய்வகமும், கல்விக்கு உதவியும் அப்போது அவசியத் தேவையாய் இருந்தது. பியரியிடம் பெரிய ஆய்வகம் இல்லை. எனினும் கூட, தனது ஆய்வகத்தில் பங்கிட்டு மேரிக்கு உதவுகிறார் பியரி. பியரி உருவவழிபாட்டு எதிர்ப்பாளரும் கூட. மேரி தனது ஆய்வைத் தொடங்குகிறார். அப்போது பியரி கியூரி  முதன்முதலில் ஈயத்தின் காந்த சக்தி பற்றி ஆய்வு செய்கிறார். இருவரும் ஆய்வகத்தில் ஒன்றாக பணிபுரிகின்றனர். இந்த அருகமை நெருக்கத்தால் இருவருக்கும் இடையில் அன்பு பரிணமிக்கிறது. அப்போதே பியரி கியூரி (1859-1906,) மேரியின் மனத்திலும்  வாழ்க்கையிலும் நுழைந்தார். (14 ஆம் வயதிலேயே பியரி  கியூரியின் கணித ஆர்வம் வெளிப்பட்டது. 16ம் வயதில் பல்கலைக் கழகத்தில்  சேர்ந்தார். 18 வயதில் அமெரிக்காவில்  முதுகலைக்கு நிகரான பட்டமும்  பெற்றார். ஆனால் பணவசதி இல்லாத காரணத்தால் அப்பட்டத்திற்குரிய தகுதியான பணி செய்ய இயலவில்லை. மிகுந்த குறைவான ஊதியம் பெற்ற ஆய்வக உதவியாளராக பணி புரிந்தார்).    

பியரி மேரியிடம் கடிதம் வழியே  தன் அன்பை பகிர்கிறார். “ நாம் இருவரும் ஒன்றாக இருந்தால் அனைத்தும் நன்றாக இருக்கும். நமது ஆய்வு மற்றும் அறிவியல் கனவுகளை தாலாட்டுவோம். உனது தேசபக்தி கனவும், நமது மனித நேயக் கனவும், நமது அறிவியல் கனவுகளையும் ஒன்றாக்குவோம்“ என்றார். ஆனால் மேரிக்கு காதல் எல்லாம் தன் தாய் நாட்டின் மீதே இருந்தது. எனவே தான் போலந்து போய் அங்கேயே வாழப்போவதாக பியரியிடம் சொல்கிறார் மேரி. மேரி சொன்னதும், பியரி தானும் அவருடன் போலந்து வந்து வாழ்வதாக வாக்களிக்கிறார்.

மேரி-பியரி கியூரி திருமணம்

பாரிசுக்கு வந்த மேரியின் ஒரே ஆதரவு பியரிதான். இரவு பகல் பாராது இருவரும் இணைந்து ஆய்வகத்தில் பணிபுரிகின்றனர். பியரிக்கு காந்தவியலில் கட்டுரை எழுத உதவுகிறார் மேரி. அந்த கட்டுரைதான், பியரி ஆய்வு முனைவர் பட்டம் பெற பெரிதும் உதவுகிறது. பியரி முனைவர் பட்டம் பெற்று, பேராசிரியர் ஆகிறார். இருவருக்கும் கொள்ளை மகிழ்ச்சி. ஆனாலும் கூட பலமுறை பியரி கேட்டும் மேரி இருவரும் இணைந்து மணம் செய்து வாழ ஒப்புதல் அளிக்கவே இல்லை. பியரியின் தொடர் முயற்சியால் மேரி சம்மதிக்கிறார். இருவருக்கும் இடையில் எல்லா வேதியலும் ஒத்திருந்தன. ஓராண்டுக்குள் இருவரும் நெருக்கமாகின்றனர்.  அறிவியல் ஆர்வமே இருவருக்கான இணைப்பான். எந்தவித மத சடங்கும் இன்றி 1895 ஜூலை 26ம் நாள்  மேரி மற்றும் பியரி கியூரியின் திருமணம்  எளிமையாக, ஸசேக்ஸ் (Sceaux)  என்ற இடத்தில்  நடந்தது. அப்போது மற்ற கிறித்துவர்கள் போல மேரி  நீளமான மணப்பெண் அங்கி, வெள்ளைத் தேவதை உடை அணிந்திருக்கவில்லை. மேரி ஆய்வகத்தில் போடும் ஒரு நீல வண்ண உடையையே அணிந்திருந்தார்.

மேரியின்   விளக்கம்: “எனக்கு அப்போது அதைத்தவிர வேறு உடை இல்லை. அதைத்தான் தினமும் அணிந்திருப்பேன். நீங்கள் யாராவது என் மேல் பிரியமாய் இருந்தால், எனக்கு ஒரு கருப்பாக இருக்கும்  உடை தாருங்கள். ஏனெனில் அதுதான் எனக்கு ஆய்வகத்துக்கும் பயன்படும்" என்று வெளிப்படையாகவே தனது ஏழ்மை நிலையை வெளிப்படுத்துகிறார். வாழ்க்கையில் காதல் பரிணாமமும் பரிமாணமும் போட்டியிட்டன.  மேரியும் பியரியும் தங்களின் தேன் நிலவு பயணத்திற்கு மிதிவண்டியிலேயே பிரெஞ்சு நாட்டின் கிராமங்களை ஊர்களையெல்லாம் ஆசையுடன், சுற்றினார்கள்.. அவர்களுக்கு விருப்பமான பொழுதுபோக்கு; மிதிவண்டி பயணமும், நீள் நெடிய பயணங்களும்தான். இவை  இருவரின்  நெருக்கத்துக்கு அதிக நெருப்பூட்டியது. காதல் மிகுந்தது. ஆனாலும் மாட்டு தொழுவம் போல ஒழுகிக்கொண்டு இருந்த ஆய்வகத்தில்தான் இருவரும்  ஆய்வுகள் செய்தார்கள். அங்கிருந்து தான் 1903 ல் மேரி முனைவர் பட்டம் பெற்றார். பிரான்சில் முதல் முனைவர் பட்டம் பெற்ற பெண் மேரி கியூரி தான். 

புரட்சி செய்த புது யுகக் கதிர்கள்!

ஜெர்மன் விஞ்ஞானி, வில்ஹெம் ராஞ்சன் 1895 ல் கண்டு பிடித்த எக்ஸ்ரே கதிர்களுக்காக  (X Rays), நோபல் பரிசு பெற்றார். பிரெஞசு விஞ்ஞானி, ஹென்ரி பெக்குவரல் 1896ல் ஒளிவீசும் உலோகம் ஒன்றில் அது எக்ஸ்ரே கதிர்களை எழுப்புகிறதா என்று ஆராய்ந்தார். அப்போது பிட்ச்பிளன்டி தாதுவில் (Pitchblende Ore) உள்ள யுரேனிய உப்புக்கள்) ஒருவிதக்  கதிர்களை வெளியிடுவதைக் கண்டறிந்தார். அவை எக்ஸ்ரே கதிர்களைவிட பன்மடங்கு ஊடுருவுத் திறனைக் கொண்டிருந்தன.

பொலோனியம்  & ரேடியம் கண்டுபிடிப்பு

மேரி கியூரி, மற்றும் பியரி கியூரி (Marie & Pierre Curie) இருவரும் யுரேனியத்தைப் போல் வேறு உலோகமும் கதிர் வீசுகிறதா என்று 100 கிராம் பிட்ச்பிளன்டி தாதுவில் சோதனை செய்து பார்த்தனர். அதில் யுரேனியத்தை விட  330 மடங்கு வீரியம் கொண்ட பன் மடங்கு ஒளி வீசும் சில பொருட்களைக் கண்டுபிடித்தனர்.

மேரி கியூரி, 1898 ஜூலையில் தனது ஆய்வகத்தில் ஒரு புதிய தனிமத்தை கண்டுபிடித்தார். அதற்கு தன் தாய்நாட்டின்  மீதுள்ள காதலால், அதற்கு பொலோனியம் என பெயரிட்டார். அதே  ஆண்டு டிசம்பர் 26ம் நாள், இன்னொரு தனிமத்தை கண்டறிந்தார். அதற்கு ரேடியம் என்று நாமம் சூட்டினார். அவைதான் கதிர்களை வீசும் பொலோனியம் (Polonium) மற்றும் ரேடியம் (Radium) என்ற இரு புதிய தனிமங்கள். மேலும், தோரியமும் கதிர்வீசும் சக்தி கொண்டது என்பதை 1898ல் மேரி கண்டுபிடிக்கிறார். ஆனால் இந்த அறிவியல் உலகம் ஒரு பெண் இப்படி எல்லாம் கண்டுபிடித்திருப்பாளா என்று சந்தேகப்படுகிறது அப்போதும் கூட எதற்கும் கவலைப்படாமல், பியரியுடன் இணைந்து, கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார் மேரி. யுரேனியம், தோரியம், ரேடியம் மற்றும் பொலோனியம் அனைத்திலுமே கதிர்கள், எக்ஸ்ரே போல் மின்சக்தி துணையின்றித் தானாகவே தொடர்ந்து எப்போதும் வெளிவந்து கொண்டிருந்தன. இதனை மேரி தம்பதியர் கவனித்தனர். மேரி கியூரி  இந்த இயற்கை நிகழ்வினை கதிரியக்கம் (Radioactivity) என்று அழைத்தார். அறிவியல் உலகுக்கு  கதிரியக்கம் என்ற சொல்லாக்கத்தை அறிமுகப்படுத்தியதே மேரி கியூரிதான். ஆனால், இயற்பியல் உலகம் மேரியின் அறிவியல் பேப்பரின் அழுத்தமான வரிகளை கவனிக்க மறந்து போனது.

ஆய்விடையே பட்ட துன்பங்கள்

பொலோனியம் கண்டுபிடிப்புக்கு முன்னர், வாழ்க்கை மேரி மற்றும் பியரியை ரொம்பவும் புரட்டிப் போட்டது.  1897ல் மேரிக்கு  முதல் குழந்தை ஐரீன் பிறக்கிறார். குடும்பத்தை பாதுகாக்க, மேரி மீண்டும் பாடம் சொல்லிட்ஜ் தருகிறார். மேரி, பியரி இருவராலும் அவர்களின் ஆய்வில் கவனம் செலுத்த முடியாத நிலை. அவர்களின் பெரும்பாலான ஆய்வுகள் மாட்டுத்தொழுவம் போன்றகொட்டகையில்தான். தொழிற்சாலைகளில் நிதி உதவி பெற்றே ஆய்வினை செய்தார் மேரி .

அறிவியல் கண்டுபிடிப்புகள்

1898 மற்றும் 1902 ஆண்டுகளுக்கிடையில் இரு கியூரிகளும்  தனியாகவும், இணைந்தும் 32 அறிவியல் பேப்பர்களை வெளியிட்டனர். அதில் ஒன்றில், ரேடியம் தனிமம், புற்றுநோய் செல்களை அழிக்க வல்லது என்ற கண்டுபிடிப்பும் அடங்கும். இதில் புற்றுநோய் செல்களே, உடலின் மற்ற வலுவான செல்களைவிட வேகமாக சீக்கிரம் அழிக்கப்படும் என்ற உண்மையைக் கண்டறிந்தனர்.

நோபல் பரிசு -  கண்டுபிடிப்பு

விஞ்ஞானி பெக்கொரல் யுரேனிய உப்பில் இருந்து கதிர்வீச்சு வருவதை உலகுக்கு  சொன்னார். மேரி முனைவர் பட்டத்துக்கான ஆய்வில்  யுரேனியக் கதிர்கள் எதிலிருந்து வருகின்றன என ஆய்வு  செய்தார். அவருக்கு உதவ தன்னுடைய பிற ஆராய்ச்சிகளை பியரி  ஒதுக்கினார். அணுக்கருவில் இருந்தே கதிரியக்கம் வருகிறது என்று  சொல்லி உலகை வியப்பில் ஆழ்த்தினார். பெக்கொரல், மேரி கியூரி மற்றும் பியரி கியூரி ஆகிய  மூவருக்கும் 1903ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. கதிரியக்கத்தை கண்டுபிடிக்க அனைத்து பிரச்னைகளையும் தடைகளையும் உடைத்து தவிடுபொடியாக்கி நோபல் பரிசு என்ற வெற்றிக்கனியை வென்றெடுத்த வீராங்கனை மேரி கியூரி.

விடாமுயற்சியும் பரிசும்

மேரி கியூரி இயற்பியலில் முக்கிய பங்களிப்புகளைச் செய்திருப்பினும் கூட , 1903 ல் மேரிகியூரி நோபல் பரிசு பெற்றிருப்பினும் கூட,  அதற்கு முன்னர் நோபல் கமிட்டியின், பரிசாளர்கள் பட்டியலில் மேரியின் பெயர் இடம் பெறவில்லை. காரணம்: இதுவரை எந்த பெண்ணும் நோபல் பரிசு பெறவில்லை. ஒரு பெண் இப்படிப்பட்ட பெரிய கண்டுபிடிப்பை செய்திருக்க வாய்ப்பு இல்லை; எனவே மேரிக்கு பரிசு கொடுப்பதில் நோபல் கமிட்டிக்கு இஷ்டம் இல்லை. நோபல் கமிட்டி பியரி கியூரி  மற்றும் பெக்கொரல் இருவருக்கு மட்டுமே நோபல் தருவதாக தகவல் சொன்னது. ஆனால் பியரி கியூரி, தன் இணையரான மேரி கியூரிதான் ஏராளமான கண்டுபிடிப்புகள் செய்துள்ளார், எனவே அவருக்கு கொடுப்பதுதான் சாலச்சிறந்தது என்றும் மேரிக்கும் நோபல் பரிசு தரப்பட வேண்டும் என்று வாதாடி அவருக்கு வாங்கித் தந்தார்.

பின்னர் யுரேனியத்தைவிட 330 மடங்கு வீரியம் கொண்ட பன் மடங்கு ஒளி வீசும் சில பொருட்களைக் கண்டுபிடித்தனர்.  யுரேனியம், தோரியம், ரேடியம்,மற்றும்  பொலோனியம் அனைத்திலுமே கதிர்கள், தானாகவே தொடர்ந்து எப்போதும் வெளி வந்து கொண்டிருந்தன. மேரி கியூரி  இந்த இயற்கை நிகழ்வினை கதிரியக்கம் (Radioactivity) என்ற சொல்லாக்கத்தை தந்தார். அடுத்து மேரி கியூரி ரேடியம் கண்டுபிடித்ததற்கு தனியாக 1911 ல் வேதியலுக்காக நோபல் பரிசு பெற்றார். இதுவரை அறிவியலுக்காக இரண்டு நோபல் பரிசு பெற்ற ஒரே விஞ்ஞானி மேரி கியூரி மட்டுமே.

மேரிக்கு நோபல்  பரிசு  கிடைத்த பின்னணி

அந்த காலகட்டத்தில், பெண்ணை ஒரு போகப்பொருளாகவே பார்த்த உலகம். அவரது அனைத்து செயல்களையும் ஆபாசமாகவே கணித்த சமூகம், அவரின் கண்டுபிடிப்பைக்கூட அங்கீகரித்த மறுத்தது. மாறாக அவாது பெயரை நோபல் பரிசுக்கு மறுத்தது. சந்தப்பர்ப்பவசமாக, ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழக கணிதப்  பேராசிரயர் கோஸ்டா மெட்டாஜ் லீப்லேர்தான் நோபல் கமிட்டியில் ஞ்சம் மனிதாபிமானம் மிக்கவர். கோஸ்டா மெட்டாஜ் லீப்லேர்தான், பியரி கியூரிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் வேண்டுமென்றே திட்டமிட்டு, பெண் என்பதால், மேரி கியூரியை கேவலமாக எண்ணி, அவருக்கு நோபல் பரிசு கமிட்டி நோபல் விருது கிடைக்க வேண்டாம் என முடிவு செய்தது. எனவே மேரிக்கு, நோபல் பரிசு கிட்டாது என எச்சரித்து எழுதி இருந்தார்.

அதன் பின்னரே பியரி, நோபல் பரிசு கமிட்டிக்கு இந்த ரேடியோ கதிர்வீச்சு மற்றும் கதிரியக்கம் தொடர்பான ஆய்வில், தன் மனைவியாகிய மேரியும், அவரது கணவராகிய தானும் இணைந்தேதான் ஆய்வு செய்தோம். அதிலும் தன்னைவிட மேரியின் பங்களிப்பே அதிகம் என்றும் அதனால் மேரிக்குதான் நியாயமாக நோபல் பரிசு கிடைப்பதற்கான உரிமை அதிகம் என்றும் தெளிவாக கடிதம் எழுதி வாதாடினார். அதன் பின்னரே மேரிக்கும் பியரிக்கும் இணைந்தே 1903 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது

நோபலும் முனைவர் பட்டமும்

1903ல் மேரிக்கு முனைவர் பட்டமும், நோபல் பரிசும் ஒருங்கே கிடைத்தன.

ரேடியம்

1903ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு மேரி  கியூரி பியரி கியூரி மற்றும் பெக்கொரல் ஆகிய மூவருக்கும் கிடைத்தது. நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி மேரி கியூரி தான். அதை வாங்கக்கூட மேரி கியூரி தம்பதியருக்கு  நேரமில்லாமல் ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர் தம்பதியர் இருவரும்.  பின்னர் ஆய்வின் மூலம் கேன்சர் சிகிச்சைக்கு ரேடியம் பயன்படுத்தலாம் என்றும் மேரி  தெரிவித்தார். அத்துடன் அவரது ஆராய்ச்சிப் பணி முடியவில்லை. பொலோனியத்தைப் பிரித்தெடுத்த பின்னும் உக்கிரக் கதிர்வீச்சு, முன்னைவிட மிக்க அளவில், அதிசயமாக மிஞ்சிய பிட்ச்பிளன்டியில் வந்து கொண்டிருந்தது. அந்த உலோகத்தின் கதிர் எழுச்சி யுரேனிய இயக்கத்தைவிட 900 மடங்கு அதிகமாக இருந்தது. 1898 இல் இம்மியளவு (மில்லியனில் ஓர் பங்கு) உள்ள அந்த தனிமம். அபூர்வ ஒளி உலோகத்தைப் பிரித்து ரேடியத்தைப் பிரித்து காண்பித்தார். அதற்கு ரேடியம் என்று மேரி பெயரிட்டார்

ரேடியமும் மேரியின் கதையும்

மேரி ரேடியம் கண்டுபிடித்த பின்னர், எப்போதும்  அதனை தனது படுக்கைக்கு அருகிலேயே வைத்திருப்பாராம். அதன் மேல் ஆசையா? அதுவும் கூட. இதுவரை யாரும் கண்டுபிடிக்காத பொருள். மேலும் அவர் படிக்க, இரவின் இருளைக் கிழிக்க, மேரி ரேடியத்தின் ஒளியைப் பயன்படுத்தினார். விளக்குக்கு செலவழிக்க பணம் இன்றி . ஆனால் இதுவே இந்த ரேடியத்தின் கதிரியக்கமும் சேர்ந்தே மேரிக்கு இரத்த புற்றுநோய் வந்து இறக்க காரணியாயிற்று. அவரின் கண்டுபிடிப்புக்காக அவர் பயன்படுத்திய ரேடியம் பொருட்கள், அவரது உடல்நிலையைப் பெரிதும் பாதித்து இருந்தன. ஆனால் அது அவருக்கு தெரியவில்லை. அப்போது அவர் பயன்படுத்திய நோட்டுகள், பேப்பர்கள், போன்றவற்றில் ரேடியத்தின் பாதிப்பு, ஊடுருவி இருந்தது பின்னர் கண்டறியப்பட்டது. அவர் பயன்படுத்திய பொருட்கள் இன்றும் கூட காரிய கோடுள்ள பெட்டிகளில் போட்டு கவனமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. பிரிக்கப்படவில்லை.

ஆராய்ச்சிக்காக அல்லோலப்படும் தம்பதியர்  

ஆனால் மிகச்சிறு நுண்ணளவில் பிரிக்கப்பட்ட ரேடியம், பொலோனியம் இரசாயனக் குணங்களை அறியப் போதாது. அவற்றின் அணு நிறையைக் (Atomic Mas)கணக்கிடாமல், கண்டுபிடிப்பை வெளிப்படுத்த முடியாது. மில்லியனில் ஒரு துகளாய் இருக்கும் புதிய உலோகத்தைக் கடைந்தெடுத்து, சிறிதளவு திரட்டக் குறைந்தது ஒரு டன் பிட்ச்பிளன்டி தாது தேவைப்பட்டது. அந்த அளவுத் தாது எங்கே கிடைக்கும்? கிடைத்தாலும் எங்கே இறக்கி வைப்பது? பிறகு இரசாயன முறையில் எப்படிச் சுருக்கம் செய்து புதிர்ப் பொருளைப் பிரித்து எடுப்பது? இந்த இமாலய முயற்சியில் மேரியும், பியரியும் போதிய நிதியின்றி, நிலமின்றி, ஆய்வகம் இன்றி, துணிந்து ஆழம் தெரியாமல் காலை வைத்தார்கள்.

டாக்டர் மேரி கியூரி

எதிர்பாராத விதமாக, பொஹீமியா சுரங்கத்தில் யுரேனியம் மீட்கப்பட்டு எஞ்சிய பிட்ச்பிளன்டி கழிவுச் சாம்பல் ஒரு டன், அவர்களுக்கு நன்கொடையாகக் கிடைத்தது. ஒருவரும் நாடாத, ஒழுகும் கூரை, இடிந்து போன ஒரு மரப்பட்டறையில்,  45 மாதங்கள் குளிரில் நடுங்கி, நடுங்கியே , வேனல் காலத்தில் வேர்வை சிந்தி, ஒரு டன் தாதுச் சாம்பலைச் சிறுகச் சிறுக, மேரியும் கியூரியும் இராப் பகலாய்ச் சலித்தும், ரசாயன முறையில் வடி கட்டியும், கடைசியில் அவர்களுக்கு வேண்டிய 0.1 கிராம் தூய ரேடியம் 1902 இல் வெற்றி கரமாய்க் கிடைத்தது. 1903 ஆம் ஆண்டில் ரேடியத்தைப் பற்றியும், கதிரியக்கம் பற்றியும் தயாரித்த அற்புத வெளியீட்டுக்கு, மேரி கியூரி டாக்டர் பட்டம் பெற்றார்.   

மேரி கியூரி 1898ல் ரேடியத்தை கண்டுபிடித்த பின்னர், மேரியும் பியரியும் மிக மோசமான் வறுமையில், அதீத பணத் தேவையில் இருந்தபோதும், யுரேனியக் கழிவிலிருந்து ரேடியம் பிரிக்க, ஏராளமான பணம் தேவைப்பட்டது. அந்த நிலையிலும் கூட , மோசமான பொருளாதாரச் சூழலிலும் கூட  அதற்கான உரிமம் பெறவோ அதன் உற்பத்தி மூலம் பலனடையவோ மேரியும் பியரியும் விரும்பவில்லை. மாற்றாக, மேரி கியூரியின் பெருந்தன்மையால்,மேரி தன்னுடைய உழைப்பை சக ஆராய்ச்சியாளர்களுக்கு கொடுத்தார். எப்படி தெரியுமா?அதன் ரகசியங்களை வெளிப்படையாகவே அதன் செயல்முறையை விளக்கினார்.

மேரியின் கருத்து

அப்போது ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டதால், அறிவியல் மற்றும் பொருளாதார உலகில் ரேடியம் பூம் ஏறபட்டது. அமெரிக்காவிலுள்ள தொழிற்சாலைகளுக்குள்ளும், அறிவியல் சமூகத்திலும், ரேடியமே பேசப்பட்டது. அப்பாவி பாமர மக்களும்கூட ரேடியத்தின் பெயரில் அதன் ஒளியில் மயங்கினர். ரேடியத்தைப் பற்றி எதுமே தெரியாவிடினும் கூட, அது என்னவோ மாயமந்திரப் பொருளாக, பசுமை ஒளிவீசும் அதிசயமாக பார்க்கப்பட்டது. மக்களுக்கு, பற்பசையிலிருந்து, உள்ளாடை வரை ரேடியம் பயன்படுத்தப்பட்டது. அது பாலின கவர்ச்சிப் பொருளாகவும் கூட பயன்பட்டது. மேரியே ரேடியத்தைக் கண்டுபிடித்திருந்தாலும் கூட, அவரால் ஒரு கிராம் ரேடியம் வாங்க முடியாது. அவரது ஆய்வைத் தொடரச் செய்வதற்குகூட அவரால் ரேடியம் வாங்க முடியவில்லை. அவ்வளவு விலை அதிகம் 1920களிலேயே ஒரு கிராம் ரேடியத்தின் விலை /மதிப்பு $100,000(ஒரு லட்சம் டாலர்). அதற்காக மேரி துளியளவும் வருத்தப்படவில்லை. அவர் 1921ல், அமெரிக்கா சென்றிருந்தபோது, மேரி, மிஸ்ஸி மலோனி (Missy Maloney) என்ற அமெரிக்க ஊடகவியலாளரிடம் “ரேடியம் ஒரு தனிமம், அது மக்களின் சொத்து. ரேடியம் ஏதோ ஒரு மனிதனை பணக்காரனாக்க வரவில்லை “ என்றே தெரிவித்தார். .

நாணயத்தின் அடுத்த பக்கம்

இப்படிப்பட்ட அதிசயமான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னர் அவர்களின் வேதனைகளும், மரணங்களும் கூட இருக்கின்றன. அறிவியல் அறிஞர்கள் தங்ககளது கண்டுபிடிப்பை மட்டும் உலக்குக்கு அர்ப்பணிக்கவில்லை. சமயத்தில் உடலையும், உயிரையும்கூட அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக அர்ப்பணம் செய்திருக்கின்றனர். அந்த பட்டியலில், மேரி கியூரியும், பியரி கியூரியும் வருகின்றனர். ரேடியத்தைக் கண்டுபிடித்தபோது அதன் நெருக்கத்தால், நீண்ட கால பயன்பாட்டால், வரும் பாதிப்பு மற்றும் வியாதிகள் பற்றி மேரி கியூரியோ, பியரி கியூரியோ அறியவில்லை. எனவேதான் ரேடியத்துடன் அருகில் இருந்து பாதிப்புக்கு உள்ளாகினர் மேரி தம்பதியர். 1906 ல், பியரியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது ரேடியம் கதிர்வீச்சின் பாதிப்பால் தான். இவையெல்லாம் அறிவியலின் துன்பியல் நாடகங்கள் அறிவியல் கண்டுபிடிப்பின் பார்க்கத் தவறிய பக்கங்கள்.

பியரியின் எதிர்பாரா மறைவும், மேரிக்கு பேராசிரியர் பதவியும்

1906 ஏப்ரல் 19 ஆம் நாள் பாரிசில், புயலுடன் கூடிய கடுமையான  மழை கொட்டியது. அப்போது பியரி ரியூடௌபைன் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே கடக்கிறார். எதிர்பாராவிதமாக, மழையின் வேகத்தில் இரவின் நெருக்கத்தில், பொருட்கள் எதுவும் தெரியாத நிலையில் குதிரை பூட்டிய பெரிய சரக்கு வண்டி பியரியை மோதித்  தள்ளியது. வண்டி சக்கரத்தில் பியரியின் தலை மாட்டிக்கொண்டது. பியரி இறப்பைத் தழுவுகிறார். பியரிக்கு வயது 46. பியரின் மரணம் மேரியை அடியோடு  குலுக்கிவிட்டது.  தன் கணவரின் சாவை சந்திக்க  மன தைரியம் இல்லை. வாழ்தலுக்கான பெரும் போராட்டத்தில், மேரி  கியூரி தனது ஆய்வுப் பணியை இயற்பியல் மற்றும் வேதியலில் தொடர்ந்தார். பியரி கியூரி இறந்தபின்னர், மேரி கியூரி சோர்போன் (Sorbonne) பல்கலைக்கழகத்தில், பியரிக்கு அடுத்து  படியாக 1906, மே 13ம் நாள்,  மேரி கியூரி பேராசிரியராகப் பொறுப்பு  ஏற்றார். பிரான்ஸ் நாட்டில் பேராசியராக பதவி வகித்த முதல் பெண் மேரி கியூரிதான்.

மேரியின் வேதனை ததும்பும் வாழ்வியல்

இடைப்பட்ட காலத்தில் மேரி  சந்தித்த வேதனைகளும் அவமானங்களும் வார்த்தைகளில் சொல்லி மாளாது. பொய்களையும் புரட்டுகளயும் புரட்டிப் போடும்  பத்திரிக்கைகளுக்கு அப்போதைய மேரியின் கல்வி, அவரது ஆய்வு மற்றும் கணவர் எல்லாமே வெறும் வாய்க்கு அவலாக மெல்லப்பட்டது. எந்த பத்திரிக்கையும் விதிவிலக்கல்ல. 1902 லிருந்தே ரேடியம் பற்றிய தகவல்கள் அதன் மருத்துவப் பயன் பரவத் துவங்கிய பின்னர், பியரியும், மேரியும் புரட்டு விரிக்கும் பத்திரிக்கைகளால் அதிகம் பேசப்பட்டார்கள். 1903ல் மேரி நோபல் பரிசு பெற்றபின்,  பத்திரிக்கையாளார்களின் கவனம் இரட்டிப்பாகியது.  

பியரி கியூரி இறந்த  பிறகு, 1910வரை அவரைப்பற்றியும்,  அவர் அம்மா, அவரின் பொன்னிற முடி, அவரின் வீரத்தனம், பியரியின் மனைவி, மற்றும்  விதவை என பல கோணங்களில் மிக மோசமாக விமரிசனம் செய்யப்பட்டார். அவரை பிரெஞ்சு அறிவியல் கழகத்தில் நுழையவிடக்கூடாது என்பதற்காகவே  திட்டமிட்டு பத்திரிக்கைகள் அவரை கேவலமாக, தரக்குறைவாக சித்தரித்தன. மேரியின் இனம், வேற்று நாட்டவர், அவரது கையெழுத்து, அவரது முகம், அவரது சொந்த வாழ்க்கை என அனைத்தும் அசிங்கமாக  விமரிசிக்கப்பட்டன.

சோதனைகளைச் சந்தித்த சாதனைப் பெண் மேரி

மேரி பிரெஞ்சு அறிவியல் அகாடமியில், காலியாக இருந்த ஒரு இடத்துக்கு விண்ணப்பித்த போது வந்த சோதனை மிகவும் கொடுமையானது. அவருக்கு எதிராக போட்டியிட்டவர் 66 வயதான ஆண். பிரான்ஸ் நாட்டின் வன்மம் மேரியின் மேல் அளவுகடந்து வீசப்பட்டது.  மேரியின் விண்ணப்பம் மறுக்கப்பட்டது; பாலினம் கேவலமாகப் பேசப்பட்டது; வேற்று நாட்டவர்; ஒரு யூதர், என்று தூற்றப்பட்டார். அவரின் காதல் வாழ்க்கையும் கூட அம்பலத்துக்கு வந்து அவப்பெயர் ஏற்படுத்தினர். இதெல்லாம் மேரி கியூரி பெண் என்பதாலேயே ஆணாகிய எட்வர்ட் பிரான்லியுடன் போட்டியிட தகுதி இல்லாவதவர் என பத்திரிக்கைகளும் கேவலப்படுத்தின. பிரான்லி கம்பியில்லாத தந்தியில் தொடர்ந்து பணிபுரிந்தவர். அப்போதுதான் 1909ல் இத்தாலியரான மார்க்கோனிக்கு  இயற்பியலுக்காக நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. பிரெஞ்சு கத்தோலிக்க குருமார்களும் பிரெட்கத்தோலிக்களும் பிரான்லிதான் வெற்றி பெற விரும்பினர்.  எட்வர்ட் பிரான்லி இரண்டு ஓட்டு வித்தியாசத்தில் 1911 , ஜனவரி 23ம் நாள் பிரெஞ்சு அறிவியல் அகாடமியில் இடம் பிடித்தார். மேரி அதனைப் பொருட்படுத்தாமல், இதுவும்  கடந்து போகும் என்ற தன்னம்பிக்கையில் தன் அறிவியல் ஆய்வகத்தில் தன்னை மூழ்கடித்துக்கொண்டு ஆய்வு தொடர்ந்தார்.

இரண்டாம்  நோபல் பரிசின் தடைக்கற்கள்

பின் மேரி  தனியே ஆய்வில் தொடர்ந்து  ஈடுபட்டார். கடுமையாக உழைத்தார். ஆனாலும் சமூகம் மேரியை குறை கூறியது. அவரைவிட 5 வயது குறைந்த பியரியின் மாணவர், விஞ்ஞானி பால் லாங்கிவினுடன்  நட்புடன் பழகியதை விமரிசித்தது. பியரியின் இறப்புக்குப் பின்னர் 4  ஆண்டுகள் கழித்து,  1910ல் இந்த வதந்தியை, மேரியை  43 வயது விதவை என்று கூறி  ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டின. மேரியைக் கேவலப்படுத்தினர். அவரின் கடிதமும் வெளியிடப்பட்டது. ஆனால், பால் லாங்கிவினுடன்  மணம் செய்ய விரும்பியே மேரி கியூரி அவருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேரி பற்றிய வதந்தி பத்திரிகைகளில் சுவாரசியமாக உலவிய கால கட்டத்தில், சுற்றி சுற்றி வந்தபோதுதான், அடுத்த கண்டுபிடிப்புக்கான நோபல் பரிசு கமிட்டி, ஸ்டாக் ஹோமில்கூடி, அந்த ஆண்டின் நோபல் பரிசாளர்களின் தேர்வைப் பற்றி விவாதித்தது. இதில் மேரியின் பங்களிப்பும், கண்டுபிடிப்பும் வந்தபோது, நோபல் கமிட்டி, மேரிகியூரி அகடமிக்கு வந்து நோபல் பரிசு பெறத் தகுதியானவர் இல்லை, மேரி கியூரி ஸ்வீடிஷ் அகாடமிக்கு வந்து ஸ்வீடிஷ் ராஜாவிடம் கை குலுக்கும் தகுதி களங்கம் நிறைந்த மேரிக்கு இல்லை என்ற முடிவை எடுக்கிறது கமிட்டி.

மேரி கியூரிக்கு நிச்சயம் தனது கண்டுப்பிடிப்புக்கு நோபல் பரிசு கிடைக்கும் ; தனது ஆய்வும் கண்டுபிடிப்பும் தகுதியானது என தெரியும். இந்த காலத்தில் நடந்த முதல் உலக்ப்போரையே கருத்தில் கொண்டார்; கவனம் முழுவதும் முதல் உலகப்போரில் பாதிக்கப்பட்ட பிரெஞ்சு போர்வீரர்களுக்கு குணப்படுத்துவதுதான் முதல் நோக்கமாக இருந்தது. இதில் ரேடியம் மிகவும் உதவிகரமாக இருந்தது. மேரி கியூரிக்கு இரண்டாம் முறையாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டாலும்கூட,  நோபல் பரிசு வாங்க ஸ்டாக் ஹோம் வரக்கூடாது என்பதுதான் நோபல் கமிட்டியின் நோக்கம்.

எனவே, மேரிக்கு நோபல் பரிசு அறிவித்த போதும்கூட, இந்த அவதூறுகளுக்கு மத்தியில் நீங்கள் நோபல் வாங்க ஸ்டாக்ஹோம் வரவேண்டாம் என நாசூக்காக  மேரி நோபல் பரிசு வாங்க வருவதை தவிர்க்க எல்லா அறிவுரைகளும் சொன்னார்கள். ரோம் நகர போப்பின் சொற்படி, மேரி கியூரியைப் பற்றி வெகு வேகமாக மோசமாகப் பேசினர். இந்த தகவல் வெளியில் பரவிய உடன், மேரி ஏராளமான சோதனைகளை சந்தித்தார் அப்போது ஸ்வீடிஷ் அறிவியல்  அகாடமியின் ஓர் உறுப்பினரான ஸ்வான்ட் ஆரினியஸ் (Svante Arrhenius), மேரிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் மேரியின் காதல் மற்றும் பத்திரிக்கைகளின் வதந்தி பற்றியும் தெரிவிக்கிறார். இதனைப் படித்த மேரிக்கு பயங்கரமான கோபம் வெடித்தது. மேரிகியூரி உடனேயே, அகாடமியின் உறுப்பினரான ஸ்வான்ட் ஆரினியஸுக்கு ஒரு  பதில் கடிதம் எழுதுகிறார். அதில் “நோபல் பரிசு என்பது ரேடியம் மற்றும் போலோனியம் கண்டுபிடிப்புக்குத்தான் கொடுக்கப்படுகிறது. இதில் அறிவியல் கண்டுபிடிப்புக்கும், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலுள்ள உண்மைகளுக்கும்  எந்தவித இணைப்பும் இல்லை. இருக்கவும் கூடாது. இதனை நான்  மிகச்சரியாகவே மதிப்பிடுகிறேன். எனவே, ஸ்வீடிஷ் அகாடமி எடுத்த முடிவை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. முடியவும் முடியாது. ஓர் அறிவியல் பணியின் மதிப்பு என்பது அதன் பாராட்டும், மதிப்பும், பெருமையும், ஒருவரைப் பற்றிய அவதூறு மற்றும் கேவலமான தகவல் /வதந்திகளால் பாழ்பட்டுவிடக்கூடாது” என காரமாக எழுதி இருந்தார். இருப்பினும் மேரி வதந்திகளால் மிகவும் பாதிக்க்பட்டு  மனம் உடைந்து போய் பொதுமக்களை சந்திப்பதைக் கூட தவிர்த்தார்.

இரண்டாம்  முறை நோபல் பரிசின் போதும் சிக்கல்கள்

அவரும் அவரது மகள்களும், ஒரு நண்பரின் ஆதரவில் மறைந்து வாழ்ந்தனர். இந்த நிகழ்வு மேரி கியூரியை மிகவும் மன வேதனைப் படுத்தியதோடு, அவரது மனத்துணிவைக் குறைத்து பலவீனப்படுத்தியது. மேரி கியூரி இந்த நிகழ்வினால் தன்னம்பிக்கையை இழந்தார். மீண்டும் மனத்தளவில் போராடும் திறன் குறைந்தது. ஆனாலும் கூட இந்த நிலையில் அப்போது விஞ்ஞானியாய் பரிணமித்த ஆல்பர்ட்  ஐன்ஸ்டீன் தான் மேரிகியூரிக்கு ஆதரவாக செயல்பட்டவர்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் & மேரி கியூரி முதல் சந்திப்பு

இப்படிப்பட்ட நிலையில் இயற்பியலுக்காக ஒரு மாநாட்டை உலக விஞ்ஞானிகள் நடத்துகின்றனர். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும், மேரி கியூரியும் முதன் முதல், புரூசல்ஸில் நடந்த பெருமைமிகு சால்வாய் மாநாட்டில் (Solvay Conference) 1911 ம் ஆண்டு சந்திக்கின்றனர். இந்த மாபெரும் நிகழ்வுதான் உலகில் இருக்ககூடிய அனைத்து இயற்பியல் விஞ்ஞானிகளையும் ஒன்றிணைத்தது. இந்த மாநாட்டில் உலகின் மாபெரும் இயற்பியல் பிதாமகன்கள்  24 பேர்கள் ஒன்று கூடி விவாதித்தனர். இதில் அழைப்பு அனுப்பட்ட 24 விஞ்ஞானிகளுள் ஒரே பெண்ணும், கலந்து கொண்ட ஒரே இயற்பியல் பெண் விஞ்ஞானியும், மேரி கியூரி மட்டுமே. இந்த மாநாட்டில் ரூதர் போர்டும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் கூட கலந்துகொள்கின்றனர். மேரி கியூரியைப் பார்த்த மாத்திரத்தில் அவரிடம் மிகுந்த மரியாதையும் ஈடுபாடும் கொண்டார் ஆல்பரட் ஐன்ஸ்டீன். ஏனெனில் ஏற்கனவே மேரி கியூரியின் திறமையை, அறிவை கண்டுப்டிப்பைப் பற்றி ஏகமாக சரிந்து வியந்திருக்கிறார். அவரால் ஈர்க்கப்பட்டார். அதனால் அதற்குப் பின்னரும் மேரிக்கு இடர்பாடு நேரும் போதெல்லாம், ஆபத்பாந்தவனாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உதவிக்கொண்டே இருந்தார். ஊடகங்கள் மேரியைப் பற்றி தவறாக அவதூறும் கேவலமும் பேசியபோது, ஐன்ஸ்டீன் தான் ஆதரவாக இருந்தார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பின்னர், மேரிக்யூரிக்கு ஒரு கடிதம் எழுதினர். அது உலகப் புகழ் பெற்றது. அந்த கடிதமானது மேரிகியூரியின் கடினமான, கவலை மிகுந்த, சோதனையான காலகட்டத்தை பிரான்ஸ் மக்களிடையே, அவர்களின் தூற்றுதலுடன் சந்தித்த போது. அதனை எளிதாகக் கடக்க துணிவும் மனதைரியத்தையும், அதீதமாகவே அளித்த கடிதம் அது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கடித நகல்:

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மேரி கியூரியின் அறிவில் மயங்கி, அவரை ஆராதித்து ஒரு கடிதம், அவரை உலகின் குருட்டுக் கண்களிலிருந்து பாதுகாக்க ஆலோசனையும் அறிவுரையும் கலந்து எழுதுகிறார். உலகின் மோசமான விஷயங்களை எப்படி சந்திப்பது, அவை விரியும்போது எப்படி கையாளுவது என்றும் சொல்லியே எழுதுகிறார். "நான் உங்களை, உங்களின் அறிவு, திறமைக்காக பெரிதும் மதிக்கிறேன். நான் இவற்றை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். உங்களின் அறிவுத்திறன், உங்களின் ஊக்கம், உங்களை இயக்கும்  ஆற்றல், உங்களின் நேர்மை இவற்றைப் பார்த்து வியந்து ரசிக்கிறேன். இப்படி உங்களுக்கு கடிதம் எழுதவதன் மூலம் நான் உங்களுடன் தனிப்பட்ட அறிமுகம் உடையவன் என்றால், அதனால் பெருமிதமும் அதிர்ஷ்டமும் உடையவனாகப் பார்க்கிறேன்" என்றார். 

கேவலமான எண்ணத்துடன் நாளிதழ்கள் மேரியைப் பற்றி மோசமாக சித்தரித்தபோது, ஐன்ஸ்டீன் கொஞ்சமும் கலங்காமல், மேரிக்கு தைரியம் ஊட்டியவர். அபத்தமான பத்திரிக்கைகளைப் படிக்காதீர்கள். அவற்றின் ஜோடிக்கபப்ட்ட தகவல்களை ஒதுக்கித் தள்ளுங்கள் என அறிவுறுத்தியவர் ஐன்ஸ்டீன்.

மேரியின் பெருமைகள்

மேரிக்கு வேதியியலில் 1911 ஆம் ஆண்டு மீண்டும் நோபல் பரிசு கிடைத்தது. தனக்கு வழங்கப்பட்ட அந்த நோபல் பரிசு பணத்தை, சமூகப் பணிக்காக பணத்தில் ஏழைப்பிள்ளைகள் பயன்பெறுமாறு ஆய்வகம் கட்டிக்கொள்ள அப்படியே கொடுத்தார் மேரி. கணவரின் பேராசிரியர் பொறுப்பை மேரி பிரான்ஸ் பல் கலைக்கழகத்தில் ஏற்றுக்கொண்டார். பிரான்சில் பேராசியர் பதவி பெற்ற முதல் பெண் மேரி கியூரி. பிறகு மேரி கியூரிக்கு படிக்க, பணிபுரிய இடம் தரமாட்டேன் என்று சொன்ன போலந்து பல்கலைக் கழகம், மேரி கியூரியின் சிலையை கல்லூரியில் நிறுவியது. இப்படி நிறுவப்பட்ட முதல் சிலை மேரியுடையதுதான். ரேடியத்துக்கு பலர் காப்புரிமை பெறச்சொன்னபோதும், அதனை மறுத்து எளிய மக்களின் வாழ்க்கையை காப்பாற்றும் மருந்தில் நான் பொருளீட்ட விருப்பமில்லை என்று தெளிவாக சொன்னவர் மேரி.

மேரியின் மகவுகள்

மேரிக்கு இரண்டு பெண்கள். இளைய பெண் ஈவா கியூரி ஒரு பத்திரிகையாளர். 102 வயது வரை வாழ்ந்து இறந்தார். மூத்த பெண் ஐரீன் ( 1897 -1956) அம்மாவைப் போலவே பெரும் விஞ்ஞானியாக இருந்தார். மேரி தன் குழந்தைகளுடன் ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும் பேசி உரையாடுவார். ஆனால் பியரி எப்போது பிரெஞ்சு மொழியில் மட்டுமே தன் குழந்தைகளுடன் பேசுவார். 

மேரி கியூரி, முதல் உலகப்போரில் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான போர்வீரர்களுக்கு உதவவே, எக்ஸ்ரே படம் எடுத்து சிகிச்சை அளிக்க அதற்கான கட்டிடம் கட்டினார். அது மட்டுமின்றி, அவரசரத்தில் போர்வீரர்களுக்கு உதவ, ஒரு எக்ஸ்ரே பூத்தும், நகரும் எக்ஸ்ரே யூனிட்டுகளும் ஏற்படுத்தினார். இந்த குட்டி குட்டி எக்ஸ்ரே யூனிட்டுகளுக்கு பெட்டி கியூரிகள் / குட்டி கியூரிகள் எனப் பெயரிடப்பட்டது.  

மகளையும் காவு வாங்கிய கதிரியக்கம்

கதிரியக்கத்தின் ஆபத்தான சூழலில் மேரியும் ஐரீனும் பணியாற்றினர். அம்மாவை பாதித்த கதிரியக்கம் ஐரீனையும் பாதித்தது. ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மேரி கியூரி இறந்தார். அம்மா இறந்த அடுத்த வருடத்தில் மேரியின் மகள்  ஐரீன் ஜோலியட்-கியூரி தனது கணவர் பிரெடரிக் ஜோலியட்-கியூரியோடு இணைந்து 1935 ஆம் ஆண்டு, வேதியியலுக்கான நோபல் பரிசினை வென்றார்.

இன்றுவரை ஒரு குடும்பத்திலிருந்து மிகக்கூடுதலான நோபல் பரிசுகளை வென்ற பெருமை மேரி கியூரியின் குடும்பத்துக்கு மட்டுமே  கிடைத்துள்ளது. இவரது மகள்கள் ஹெலன் மற்றும் பியரியும் ஆகியோரும்கூடப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள். ஐரீன் ஜோலியட்-கியூரி: மறைந்த நாள்-  1956. மார்ச் 17.

பணத்தைப் போற்றாத தம்பதியர்

மேரி கியூரி மற்றும் பியரி கியூரி தம்பதியரி வாழ்வில் பணம் எப்போதுமே ஒரு பொருட்டாக இருந்ததில்லை. அவர்களுக்கு உணவு, உடை , வாழ்நிலை என்றும் ஆராய்ச்சிக்கென்றும் , அவர்களின் தேவைகளுக்கென்றும் எப்போதுமே பணத்தின் தேவை அவர்களை சுற்றி சுற்றி வந்தது. அவர்களின் வாழ்நாளுக்குக்கான அடிப்படைத் தேவைகளை மட்டும் நிறைவேற்றிக் கொண்டனர். இந்த நிலையிலும் கூட, அவர்களுக்கு ஏராளமான பொருளாதாரத் தேவை இருந்தபோதும், ரேடியத்தின் கண்டுபிடிப்புக்கான உரிமம் கோரவில்லை. நண்பர்கள் எல்லாம் வற்புறுத்தியும்கூட அறிவியல் உலகுக்காக, மக்களுக்காக தங்களின் கண்டுபிடிப்பை மக்களுக்கும், அறிவியல் கண்டுபிடிப்புக்கும் அர்ப்பணித்தனர். இந்த நிலையிலும்கூட அவர்களுக்கு வரும் விருதுகளையும் பரிசளிப்பையும், மெடலையும் மறுதளித்தனர்.

மேரி கியூரி தம்பதியரைப் பெருமைப்படுத்தும் விதமாக பல அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.

வெள்ளிவிழா கண்ட ரேடியம் & சுயமரியாதை மேரியும்

மேரிகியூரியின் ரேடியம் கண்டுபிடிப்பின், 25 வது ஆண்டு வெள்ளிவிழாவுக்கு பின்னர், அதாவது 1928க்குப் பின்னர் பிரெஞ்சு அரசு மேரி கியூரியின் வாழ்வாதாரத்துக்கு  உதவித்தொகை கொடுத்தது. இருப்பினும்கூட மேரி கியூரி தனக்கு தனக்கு மற்ற இடங்களிலிருந்து பொருளாதார உதவி கிடைத்ததும், அரசு கொடுத்த் வந்த உதவித்தொகை வேண்டாம என்று மறுத்துக் கூறி, அதனைப் பெற்றுக்கொள்ளவில்லை.

மேரி கியூரி ஐன்ஸ்டீன் வார்த்தைகளில் “மேரி கியூரி போன்ற தன்னலம் கருதாத ஒருவரை யாரும் எளிதில் பார்த்துவிட முடியாது. எனக்குத் தெரிந்த, இந்த அறிவியல் உலகில், அவரது புகழும் அவரது பணமும் மட்டுமே எதனாலும் களங்கப்படாமல் இருக்கிறது. அவற்றை களங்கப்படுத்தவும் யாராலும்  முடியாது“ என்றார்.

கடவுள் மறுப்பாளர்

மேரி கியூரி வாழ்ந்த காலத்தில் பரவிய நாசிசத்துக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்த அவர் சோசலிச அரசியலுக்கு ஆதரவானவராக இருந்தார். மேரி கடைசிவரை கடவுள் மறுப்பாளராக இருந்தார். மேரி கியூரி அவரது இணையர் பியரி கியூரியின் வரலாற்றையும் எழுதினார்.

மேரியின் பெருமைக்கு உதாரணம்.. அமெரிக்க அதிபர் அழைப்பு

முதல் உலகப் போரின் போது (1914-1918) மேரியும், ஐரீனும் இணைந்து எக்ஸ்ரே கதிர்ப்பட வரைவைச் (X-rays Radiography) சீர்ப்படுத்தி, காயம் அடைந்தோர்க்கு நோய் ஆய்வுக் கருவியாய் (Medical Diagnosis) ஏற்பாடு செய்தார்கள். அமெரிக்க அதிபர் வாரன் ஹார்டிங் 1921ம் ஆண்டு, மே 20ம் நாள், மேரி கியூரியை தங்கள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அவருக்கு மரியாதையும் பெருமையும்  தருவதற்காக அழைத்தனர். அப்போது மேரி கியூரி,  1921 இல் தன்புதல்வியரை அழைத்துக் கொண்டு, அமெரிக்காவுக்குச் சென்றார். அப்போது ஜனாதிபதி வாரன் ஹார்டிங் (Warren Harding) அவரை வரவேற்று, உபசரித்ததார். பின்னர்  அவர்கள் மேரிகியூரிக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ஒரு கிராம் ரேடியத்தை மேரி கியூரி அவர்களுக்கு பரிசாக அளித்தார்.

இந்த ஒரு கிராம் ரேடியம் எப்படி சேகரிக்கப்பட்டது தெரியுமா? அமெரிக்க ஐக்கியநாட்டு பெண்களிடமிருந்து தொடர்ந்து ஒரு வருடமாக கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்ததாகும். ஒரு கிராம் ரேடியத்தின் விலை $100,000 மட்டுமே. இன்றைய இந்திய பணத்தில் அன்றைய ஒரு கிராம் ரேடியத்தின் மதிப்பு ரூ. 65.00,000ஆகும். 

மக்களுக்காக  நோபல் மெடல் விற்க முயற்சி

நமக்கெல்லாம் அதிர்ச்சி அளிக்கும் ஒரு விஷயமும் கிடைத்துள்ளது. அதாவது, ஒரு காலத்தில், ரேடியத்துக்கு உரிமம் வேண்டாம் என மறுத்து மக்களுக்கு அதன் போய்ச் சேரட்டும் என தான் வறுமையில் வாழ்ந்த போதும் கூறினார். மேரி . ஆனால் ஒரு காலகட்டத்தில், தனக்கு கொடுக்கப்பட்ட தங்கத்திலான நோபல் பரிசின் மெடலை விற்க முயற்சித்தார். எதற்கு தெரியுமா? முதல் உலகப்போரில் ஈடுபட்டுள்ளோருக்கு உதவவே. இருப்பினும், அவரது பெருமையினை நன்கு உணர்ந்த பிரான்ஸ் நாட்டின் வங்கி அந்த தங்க மெடல்களை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

போருக்குப் பின்னர்..

முதல் உலகப்போருக்குப் பின்னர், மேரி அவரது பணியை ஆராய்ச்சியாளராக, ஆசிரியராக,  ஆய்வகத்தின் தலைமைப் பொறுப்பாளராக பணியை பன்முகத் தன்மையுடன தொடருகிறார். மேரி கியூரி அதன் பின்னரும் ஏராளமான பரிசுகளை அள்ளிக் குவிக்கிறார். அதில் முக்கியமாது, 1921ல் பெற்ற எல்லன் ரிச்சர்டு ஆய்வுப் பரிசு, பின்னர் 1923 ல், மார்க்விஸ் டி, ஆர்கென்தௌ (Grand Prix du Marquis d'Argenteuil) பரிசு. பின்னர் 1931ல், எடின்பரோ பல்கலைக்கழகம் தந்த காமேரோன் பரிசு. பின்னர், உலகம் முழுவதிலும் இருந்து பலவகை பல்கலைக்கழகங்களிலிருந்து பரிசும் விருதும் பெற்றார் . மேரிக்கு எல்லியட் கிறேச்சொன் மெடல் கிடைத்தது. டேவிமெடலும் கூட கிடைத்தது.

பின்னர் மேரிகியூரியின் பெயர் அறிவியல் உலகில் வெற்றிப் பெயராகியதும், மேரி கியூரி, தனது பெயரை லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு வைக்க அனுமதித்தார். மேரி கியூரி மருத்துவமனை 1930ல் வடக்கு லண்டனில் துவங்கப்பட்டது. அதில் முழுக்க முழுக்க பெண் ஊழியர்கள் மட்டுமே. மேலும் இங்கு பெண் புற்று நோயாளிகளுக்கு ரேடியம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 1944 குண்டு வெடிப்பில் மேரி கியூரி மருத்துவமனை அழிக்கப்பட்டபோதும், மீண்டும் கட்டப்பட்டது. இது பொதுவாக புற்று நோயாளிகளுக்கே முன்னுரிமை. மேரி கியூரி என்பது ஐரோப்பிய நாடுகளின் தரும் ஸ்தாபன நிலையம். அதில் புற்றுநோய்க்கு மட்டுமல்ல, மற்றவைகளுக்கும் சிகிச்சை தரப்படுகிறது. 2015ல், மேரிகியூரியின் பேத்தி, ஹெலன் லாஞ்சிவின் ஜோலியோட் ( Hélène Langevin-Joliot,) அந்த மருத்துவமனைக்கு வந்து பார்த்துப் போயிருக்கிறார்.

இறப்புக்குப் பின்னும் பெருமை சேர்ப்பு

மேரி கியூரி தனது இறப்புக்குப் பின்னரும்கூட இருமுறை புதைக்கப்படுகிறார். மேரி கியூரி இறந்த போது1934, ஜூலை 6ம் நாள், பியரி கியூரியும், மேரியின் மாமானார் மற்றும் மாமியார்  புதைக்கப்பட்டிருந்த அதே மயானத்திற்குள், அவர்கள் அருகிலேயே பிரான்ஸில்  ஸசெக்ஸ் என்ற ஊரில் புதைக்கப்பட்டார். அதன்பின் 60  ஆண்டுகள் கழிந்தன. பின்னர், 1995 ல் மேரி கியூரி மற்றும் பியரி கியூரியின் புதைவிட மிச்சசொச்சங்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. மேரி கியூரி மற்றும் பியரி கியூரி இருவருக்கும் பெருமை சேர்ப்பிக்க அவர்களின் எஞ்சிய மிச்ச சொச்சங்களை எடுத்து பிரான்ஸின் தேசிய அருங்காட்சியகத்தில் பாரிஸில், பாந்தியோன் என்ற முக்கியமான இடத்தில் பிரான்சின் மரியாதைக்குரியவர்களை மட்டுமே புதைக்கும் இடத்தில், மீண்டும் புதைக்க பிரெஞ்சு அரசின் குடியரசுத்தலைவர் மிட்டர்லாந்த் ஓர் உத்தரவிடுகிறார். அவர்கள் மரியாதையுடன் மீண்டும் புதைக்கப்படுகிறார்கள். பிரெஞ்சு நாட்டின் மிக்க உன்னதமான புனிதமான பாந்தியனில், மேரியின் சொந்த சாதனைகளுக்காகவே அங்கு மரியாதை மற்றும் புகழுடன் அடக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டு விருது கொடுக்கப்பட ஒரே பெண் மேரி கியூரி மட்டுமே.

ஏப்ரல் 1995ல்,நடந்த  இந்த நிகழ்வைப்பற்றி, பிரெஞ்சு குடியரசுத்தலைவர் மிட்டர்மென்ட் பாந்தியனில் கூறியது: 

இந்த மேரி கியூரி மற்றும்  பியரி கியூரி என்ற இரு விஞ்ஞானிகளின் ஜீவிதமான உடலின் சாம்பலை/ எச்சத்தை மாற்றி, பெருமைமிகு சரித்திரம் பேசும் நினைவுகளின் சரணாலயத்தில் பாந்தியனில் வைப்பதால் (sanctuary of our collective memory) பிரான்ஸ் தேசம், இவர்களின் செயல்களுக்கு அங்கீகாரம் கொடுப்பது மட்டுமின்றி, அறிவியலின் அசைக்க முடியாத நம்பிக்கைகளுக்கு, ஆராய்ச்சிக்கு மற்றும் யாரெல்லாம் மேரி கியூரி மற்றும் பியரி போல அறிவியல்  தங்களை அறிவியலுக்கு அர்ப்பணிகிறார்களோ அவர்களுக்கு யார் மேரி கியூரி போல அவர்கள் வாழ்வையும் ஆற்றலையும் அறிவியலுக்கு அர்ப்பணிகிறார்களோ அவர்களுக்கு இடம் கிடைக்கும்” என்றார். 

ஏற்கனவே மேரி கியூரி மறைந்து போய் 150 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அவர் பயன்படுத்திய பொருட்களின் மேல் பாதிக்கப்பட்டுள்ள ரேடியம் தனிம கதிர்வீச்சின் தாக்கம் இன்னும் அவற்றில் உள்ளன. இது குறைய இன்னும 1500 ஆண்டுகள் ஆகும். அதுதான் கதிர்வீச்சு தனிமத்தின் ஆளுமை. அதன் அரை ஆயுள் காலம் 1500 ஆண்டுகள் ஆகும். எனவே மேரி கியூரி  மற்றும் பியரி கியூரி பயன்படுத்திய நோட்டுகள், பேப்பர்கள், அவர்களின் எழுது கோல்கள், போன்றவற்றை ஒரு பெட்டியில் போட்டு அதனை ஒரு அங்குல கனமுள்ள காரிய தகட்டு கொண்டு மூடி பத்திரமாய் வைத்துள்ளனர். அதுபோல மேரி கியூரி மற்றும் பியரி கியூரி இருவரின்  உடல்களிலும் கூட ரேடியம் தனிமத்தின் கதிர்வீச்சு இருக்கும், எனவே அவர்களில் கல்லறையும் கூட ஒரு அங்குல கனமுள்ள காரீயதகடால் மூடப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. மேரிகி யூரி பயன்படுத்திய அனைத்துப் பொருட்களிலும் கதிர்வீச்சின் தாக்கம் இன்னும் 1500 ஆண்டுகளுக்கு உண்டு. 'நவீன இயற்பியலின் அன்னை' என மேரி கியூரி பெருமையுடன அழைக்கப்படுகிறார்.

மேரியை சோதனை செய்த எந்த ஒரு சிறப்பு மருத்துவரும் மேரியின் பிரச்சினை என்ன வியாதி என்ன என்று கூட சொல்லவே இல்லை. ஏனெனில் அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் எல்லோரும் மேரிக்கு காச நோய் என்றே ஐயுற்றனர். மேரியை ஸ்விட்சர்லாந்தில் உள்ள காசநோய் சானடோரியத்துக்கு போகச் சொன்னார்கள். ஜெனிவாவிலிருந்து வந்த ஒரூ மருத்துவ அதிகாரி மட்டும் இது இரத்தம் தொடர்பான நோய், இதனை குணப்படுத்த முடியாது  என்றார். பின்னர் மேரி கியூரி, 1934ல் ஜூலை 4ம்  நாள் மேரி இவ்வுலகை மறந்தார். இவரின் எலும்பில் பிரச்சினை, அது ரொம்ப நாளாக பாதிப்புக்கு உள்ளாகி கெட்டுவிட்டது.

"மேரியின் ஆய்வு அவரது வாழ்நாளில் அப்பழுக்கற்றது, எல்லையற்றது. அவர் மனித சமுதாயத்துக்கு மட்டும் அவரது பணியை அர்ப்பணிக்கவில்லை, அவர் தனது எல்லா வேலை ஆய்வுகளையும், ஓர் நியாய தர்மத்தின் அடிப்படையிலேயே தார்மீக தரத்துடன் இருந்தது. இவ்வளவையும் மேரி ஆத்மார்த்த உணர்வுடனும், நல்ல உடல் மற்றும் உள்ள வலுவுடனும், நீதி உணர்வுடனும், செய்து முடித்தார். இப்படி அனைத்துவித அரிய நல்ல குணங்களும் ஒருவரிடம் அமைதல் அரிது" என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

“அறிவியல் அற்புத அழகு நிறைந்தது என நான் கருதுகிறேன். ஓர் அறிவியலாளர் என்பவர் ஆய்வகத்தில் வெறும் தொழில்நுட்பவியலாளர் மட்டும் அல்ல, அவர் இயற்கையின் நிகழ்வுகளை அதன் போக்கிலேயே எதிகொள்ளும் மனிதர்தான், அவை கற்பனைக்கதைகளாக இருப்பினும் கூட  “  என்றார் மேரி கியூரி

2009ல் அறிவியலுக்காக ஓர் ஓட்டெடுப்பு நடந்தது. அதில் “அறிவியலின் அதிக எழுச்சியூட்டும் உத்வேகமூட்டும்  மங்கை மேரிகியூரிதான்“ என தேர்ந்தெடுத்தனர்.

2011ம் ஆண்டு , மேரிகியூரி வேதியலில் நோபல் பரிசு பெற்ற 100 வது ஆண்டு. சதம் போட்ட ஆண்டு  அது ரேடியம் கதிர்வீச்சு கண்டுபிடிப்பின் நூறாவது ஆண்டு விழா. எனவே மேரி கியூரியை பெருமைப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை, 2011 ஆம் ஆண்டை, “சர்வதேச வேதியல் ஆண்டு” என அறிவித்தது. ஆனால், மேரியை படிக்க விடாத, பணி கொடுக்காத போலந்து நாடு, 2011 ம் ஆண்டை மேரிகியூரியின் ஆண்டு என அறிவித்தது. பிரான்ஸ்  நாடு, மேரிக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக 2011 ஐ மேரிகியூரி ஆண்டு எனப் பெருமையோடு அறிவித்து பெருமை பெற்றது பிரான்ஸ்.