Type Here to Get Search Results !

அக்டோபர்13

👉 சர்வதேச இயற்கைப் பேரழிவு குறைப்பு தினம்


🌷 1911ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி இந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் அசோக் குமார் பீகாரில் உள்ள பாகல்பூரில் பிறந்தார்.

🌷 1792ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் டிசியில் வெள்ளை மாளிகை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.


சர்வதேச இயற்கைப் பேரழிவு குறைப்பு தினம்

🌷 ஆண்டுதோறும் சர்வதேச இயற்கைப் பேரழிவு குறைப்பு தினம் அக்டோபர் 13ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் ஐ.நா.சபையின் மூலம் 1989ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

🌷 புயல், வெள்ளம், பூகம்பம், எரிமலை, சுனாமி, காட்டுத்தீ, கனமழை, சூறாவளி போன்றவை பேரழிவுகளை ஏற்படுத்துகின்றன. இயற்கைப் பேரழிவுகளை தடுத்தல், குறைத்தல் மற்றும் இவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுதல் போன்றவற்றின் மீது கவனம் செலுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


மார்கரெட் ஹில்டா தாட்சர்

🌼 இங்கிலாந்தின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமரான மார்கரெட் ஹில்டா தாட்சர் 1925ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி இங்கிலாந்தின் லிங்கன் பகுதியில் உள்ள கிரேந்தம் என்னும் இடத்தில் பிறந்தார்.

🌼 இவர் இருபதாம் நூற்றாண்டில் நீண்டகாலம் பொறுப்பாற்றிய இங்கிலாந்து பிரதமர். இவர் 1979 முதல் 1990 வரை தொடர்ச்சியாக பணியாற்றினார். இவர் மூன்று முறை தொடர்ச்சியாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

🌼 இவர் இங்கிலாந்தின் 'இரும்பு பெண்மணி' என அழைக்கப்பட்டார். இவரால் செயலாக்கப்பட்ட கொள்கைகள் 'தாட்சரிசம்' என அழைக்கப்பட்டது. இவர் தனது 87வது வயதில் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி லண்டனில் மறைந்தார்.


சகோதரி நிவேதிதா

🌷 சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும், சமூக சேவகியுமான சகோதரி நிவேதிதா 1867ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி அயர்லாந்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபிள்.

🌷 ஒருமுறை தோழியின் வீட்டில் சுவாமி விவேகானந்தரின் உரையைக் கேட்டார். அதில் கவரப்பட்டவர், அவரது பேச்சுகளை அடிக்கடி கேட்கத் தொடங்கினார். அவர்தான் தன் குரு என்று தீர்மானித்தார்.

🌷 ஒரு சமயம் இந்தியப் பெண்களின் நிலை பற்றி பேசிக் கொண்டிருந்த விவேகானந்தர், 'எங்கள் தேசத்துப் பெண்கள் கல்வி பெற நீ உதவ முடியும் என நம்புகிறேன்' என்றார். இதை அரிய வாய்ப்பாகக் கருதியவர், உடனே புறப்பட்டு இந்தியா வந்தார்.

🌷 வந்தே மாதரம் தேசியப் பாடலாக அங்கீகரிக்கப்படாத காலகட்டத்திலேயே அதை தன் பள்ளியில் காலை வணக்கப் பாடலாகப் பாடச் செய்தார். பெண் உரிமைக்காகப் போராடத் தூண்டுகோலாக இருந்த இவரை தன் குருவாக குறிப்பிட்டுள்ளார் பாரதியார். சகோதரி நிவேதிதா 43-வது வயதில் 1911ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி மறைந்தார்.