Type Here to Get Search Results !

மே 15

👉 சர்வதேச குடும்ப தினம்

👉 பியரி கியூரி பிறந்த தினம்


🌷 1718ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்றார்.

🌷 1907ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி இந்திய விடுதலைக்காக வீரமரணம் அடைந்து, இன்றும் பல இளைஞர்களுக்கு உந்து சக்தியாக திகழும் சுகதேவ், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிறந்தார்.


சர்வதேச குடும்ப தினம்

ஐக்கிய நாடுகள் சபையால் 1992ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் மே 15ஆம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

குடும்பங்களுக்கிடையே சமத்துவத்தை வளர்க்கவும், வீட்டு பொறுப்புகள், தொழில் வாய்ப்புகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் குடும்பங்களின் பங்களிப்பை உணர்த்தவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

எந்த சூழ்நிலையிலும், எந்த வயதினிலும், யாரும் குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை சர்வதேச குடும்ப தினம் வலியுறுத்துகிறது.


பியரி கியூரி

மனிதகுல மேம்பாட்டிற்கான பல சிறந்த கண்டுபிடிப்புகளை கண்டறிந்த பியரி கியூரி 1859ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி பாரிஸில் பிறந்தார். இவர் 21வது வயதில் தன் சகோதரருடன் இணைந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பீசோ மின் குவார்ட்ஸ் மின்னோட்டமானியை (Piezo Electric Effect) கண்டறிந்தார்.

இவர் காந்த குணங்களைக் கண்டறிவதற்காக முறுக்குத் தராசு (Torsion Balance) ஒன்றை உருவாக்கினார். பிறகு காந்தப் பொருட்கள் வெப்பத்தால் அடையும் மாற்றம் பற்றி இவர் கண்டறிந்த விதிமுறையை கியூரி விதி எனப்படுகிறது.

தன் மனைவி மேரி கியூரியுடன் இணைந்து ரேடியம் மற்றும் பொலோனியம் தனிமங்களைப் பிரித்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டார். இவர்கள்தான் கதிரியக்கம் (Radioactivity) என்ற சொல்லை முதலில் பயன்படுத்தினார்கள்.

கதிரியக்கத்தை கண்டறிந்தமைக்காக 1903-ல் ஹென்றி பெக்கெரல், மேரி கியூரியுடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். காந்தப் புலங்களைப் பயன்படுத்தி ஆல்பா, பீட்டா, காமா கதிர்களை கண்டறிந்தார். கதிரியக்கத்தை அளக்கப் பயன்படும் அலகு கியூரி அலகு என்று குறிப்பிடப்பட்டது.

நோபல் பரிசு குடும்பத்தில் பிறந்த கதிரியக்கக் கண்டுபிடிப்பின் முன்னோடியான பியரி கியூரி தனது 46வது வயதில் (1906) மறைந்தார்.