Type Here to Get Search Results !

பிப்ரவரி 16

👉 தாதாசாஹெப் பால்கே நினைவு தினம்


🌷 1956ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி இந்திய வானியற்பியலாளர் மேகநாத சாஃகா மறைந்தார்.


எர்ன்ஸ்ட் ஹேக்கல்

🌷 அறிவியலாளர், தத்துவமேதை, ஓவியர் என பலதுறைகளில் தனது பங்களிப்பை சிறப்பாக தந்த எர்ன்ஸ்ட் ஹேக்கல் 1834ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி ஜெர்மனியிலுள்ள பிரஷ்யாவின் போட்ஸ்டம் நகரில் பிறந்தார்.

🌷 இவர் 1857ஆம் ஆண்டு மருத்துவத்தில் பட்டம் பெற்று, மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். ஆன் தி ஆரிஜின் ஆஃப் ஸ்பீசீஸ் என்ற டார்வின் எழுதிய நூலை படித்த பிறகு இவரது வாழ்வில் திருப்புமுனை அமைந்தது.

🌷 பின்பு உயிரியலில் ஆர்வம் வந்து, 1861ஆம் ஆண்டு விலங்கியலில் முனைவர் பட்டம் பெற்றார். உயிரினங்கள் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 1866ஆம் ஆண்டு கேனரி தீவுகளுக்கு சென்றபோது டார்வினை சந்தித்தார்.

🌷 இவர் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, ஆயிரக்கணக்கான புதிய உயிரினங்களைக் கண்டறிந்து பெயர் சூட்டினார். எல்லா உயிரினங்களையும் உள்ளடக்கிய இனவழிப் படிவரிசையை உருவாக்கினார்.

🌷 பல வகையான உயிரினங்கள் குறித்த விவரங்களுடன் 'ஆர்ட் ஃபாம்ஸ் ஆஃப் நேச்சர்' என்ற நூலை எழுதினார். இவர் 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

🌷 இவர் தான் முதலில் உயிரினங்களை ஒரு செல் உயிரி, பல செல் உயிரி என பிரித்தவர். மனிதரை 10 இனங்களாகப் பிரித்து, அதற்கான காரணத்தை விளக்கினார்.

🌷 'இந்திய துணைக் கண்டம்தான் மனிதகுலத்தின் பிறப்பிடம்' என்று 'தி ஹிஸ்ட்ரி ஆஃப் கிரியேஷன்' என்ற நூலில் விரிவாக எழுதியுள்ள இவர் 85வது வயதில் (1919) மறைந்தார்.


தாதாசாஹேப் பால்கே

🌷 இந்தியத் திரையுலகின் தந்தை, தாதாசாஹேப் பால்கே 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பிறந்தார். இவரின் இயற்பெயர் துண்டிராஜ் கோவிந்த் பால்கே.

🌷 பன்முகத்திறன் கொண்ட இவர், திரைப்படம் எடுப்பதை தன் லட்சியமாக வகுத்துக்கொண்டார். சினிமா பற்றி தெரிந்தவர், இவர் ஒருவர்தான் என்பதால் எழுத்து, இயக்கம், கேமரா என எல்லாவற்றையும் இவரே மேற்கொண்டார்.

🌷 1913ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ராஜா ஹரிச்சந்திராவை வெளியிட்டார். இதன்மூலம் இந்தியாவில் சினிமாவை அறிமுகப்படுத்திய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். ஹிந்துஸ்தான் பிலிம் கம்பெனியை தொடங்கினார்.

🌷 தனது சினிமா வாழ்க்கையில் மோஹினி பஸ்மாசுர், சத்யவான் சாவித்ரி, லங்கா தஹன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மற்றும் சில குறும்படங்களை தயாரித்துள்ளார்.

🌷 வாழ்நாள் முழுவதையும் திரைப்படத்துறைக்காகவே அர்ப்பணித்த இவர் 73வது வயதில் 1944ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில், திரைத்துறையில் தாதாசாஹேப் பால்கே விருதினை இந்திய அரசு, 1969ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது.