Type Here to Get Search Results !

அக்டோபர்16

👉 உலக உணவு தினம்

👉 வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம்


🌷 1905ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியில், இந்தியாவில் வங்கப் பிரிவினை நடைபெற்றது.

🌷 1974ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி கர்நாடக இசைக்கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதர் மறைந்தார்.


உலக உணவு தினம்

🌷 உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1979ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது. பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.


உலக மயக்கவியல் தினம்

💉 1847ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள இந்தியாவின் முதல் மருத்துவக் கல்லூரியில், முதன்முறையாக ஈதர் பயன்படுத்தி அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவ உலகில் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த நிகழ்வை போற்றும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 16ஆம் தேதி உலக மயக்கவியல் தினமாக (உலக அனஸ்தீஸியா தினம் (அ) ஈதர் தினம்) கடைபிடிக்கப்படுகிறது.


நோவா வெப்ஸ்டர்

🌷 அமெரிக்க ஆங்கில சொல்லிலக்கணத்திற்கும், எழுத்திலக்கணத்திற்கும் காரணியான நோவா வெப்ஸ்டர் 1758 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி மேற்கு ஹார்ட்பர்டில் பிறந்தார். இவர் பள்ளிப் புத்தகங்களை எழுதினார். அமெரிக்கர்கள் கட்டாயம் அமெரிக்க புத்தகங்களையே கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

🌷 1783 இல், முதல் அமெரிக்க ஆங்கில சொல்லிலக்கணப் புத்தகத்தை வெளியிட்டார். அவரது மொழி சீர்த்திருத்தமைப்பில் அமைந்த ஆங்கில ஒலிப்பு முறைகளும் சொல்லிலக்கணமுமே இன்றைய அமெரிக்க ஆங்கிலமாக திகழ்கின்றது.

🌷 1828 இல், முதல் அமெரிக்க ஆங்கில அகராதியான வெஸ்டரின் அகராதியை வெளியிட்டவரும் இவரே. இவர் 1843 ஆம் ஆண்டு காலமானார்.


வீரபாண்டிய கட்டபொம்மன்

🌷 ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 1760ஆம் ஆண்டு ஜனவரி 03ஆம் தேதி பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தார்.

🌷 பிரிட்டிஷ் அரசு தன்னுடைய ஆட்சியை நிலைநாட்டுவதற்காக, பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூலிக்க முடிவு செய்தது. அப்பகுதியில் வரி வசூலிக்கும் ஆங்கிலேயத் தளபதியால் கட்டபொம்மனிடமிருந்து வரி வசூலிக்க முடியவில்லை.

🌷 1797ஆம் ஆண்டு கட்டபொம்மனுடன் போரிட பெரும்படையுடன் ஆங்கிலேயத் தளபதி ஆலன் வந்தார். கோட்டையைத் தகர்க்க முடியாமல் தோற்று ஓடினார். பின்பு நெல்லை கலெக்டர் ஜாக்ஸன் தன்னை வந்து சந்திக்குமாறு இவரை அழைத்தார்.

🌷 ஆனால் குறிப்பிட்ட இடத்தில் சந்திக்காமல் வௌ;வேறு இடங்களுக்கு வரச் சொல்லிய ஜாக்ஸன், இறுதியாக ராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது, கட்டபொம்மனை கைது செய்ய முயற்சித்தனர். கட்டபொம்மன் அதை முறியடித்து, பத்திரமாக பாஞ்சாலங்குறிச்சிக்கு திரும்பினார்.

🌷 இந்த சந்திப்பின்போது வரி செலுத்துமாறு ஜாக்ஸன் இவரிடம் வலியுறுத்தினார். உங்களுக்கு வரிசெலுத்தும் அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் சுதந்திர மன்னர்கள் என்று கட்டபொம்மன் துணிச்சலாக அவரிடம் கூறினார். இவரது வீரத்தைப் பார்த்து, சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களும் ஆங்கிலேயரை எதிர்த்தார்கள்.

🌷 இறுதியாக கயத்தாறு என்ற இடத்தில் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போதும்கூட, என் தாய் மண்ணைக் காக்க உங்களுக்கு எதிராகப் போராடினேன் என கம்பீரத்துடன் முழங்கிய இவர் 1799ஆம் ஆண்டு கயத்தாறில் 39வது வயதில் அக்டோபர் 16ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.