Type Here to Get Search Results !

மே 17

👉 உலக தொலைத்தொடர்பு தினம்

👉 உலக உயர் இரத்த அழுத்த தினம்

👉 எட்வர்டு ஜென்னர் பிறந்த தினம்


🌷 1897ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி இந்தி இலக்கியத்திற்கு புதுவடிவம் கொடுத்த தீரேந்திர வர்மா, உத்தரப்பிரதேசத்தின் பரேலியில் பிறந்தார்.


உலக தொலைத்தொடர்பு தினம்

உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைத்தொடர்பு துறையும் ஒன்றாகும். தகவல் தொடர்புக்கென முதன்முதலாக 1865ம் ஆண்டு மே 17ஆம் தேதி பாரிஸில் பன்னாட்டு தந்தி ஒன்றியம் நிறுவப்பட்டது.

பின்பு, உலக தொலைத்தொடர்பு சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இச்சங்கம் துவங்கப்பட்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மே 17ம் தேதி இத்தினம் கொண்டாடப்படுகிறது.

இணையம் மற்றும் புதிய தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக தொலைத்தொடர்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

மேலும், இச்சங்கம் உலகம் முழுவதும் தொலைத்தொடர்பை ஏற்படுத்தி, உலக மக்களிடம் ஒரு பிணைப்பை உருவாக்கியுள்ளது.


உலக உயர் இரத்த அழுத்த தினம்

உலக சுகாதார நிறுவனம் கார்டியோவாஸ்குலர் நோயினால் (இருதய நோய்) ஏற்படும் இறப்பு விகிதத்திற்கான முக்கிய காரணமாக உயர் இரத்த அழுத்தத்தைக் குறிப்பிட்டிருக்கிறது.

உலகத்தில் உயர் இரத்த அழுத்தம் உள்ள மக்களில், 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய நிலை குறித்து அறியாதவர்களாக இருக்கின்றனர். உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.

இது சம்பந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்தவே, உலக சுகாதார நிறுவனம் உயர் இரத்த அழுத்தம் குறித்து 2005ஆம் ஆண்டில் உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியது என்பதுடன் ஒவ்வொரு ஆண்டும் மே 17ம் தேதியை உலக உயர் இரத்த அழுத்த தினமாக அறிவித்திருக்கிறது.


எட்வர்டு ஜென்னர்

பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்த எட்வர்டு ஜென்னர் 1749ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி இங்கிலாந்தின் பெர்க்லி நகரில் பிறந்தார்.

ஜான் ஃபியூஸ்டர் என்ற மருத்துவர் கவ் பாக்ஸ் (Cow-pox) நோய் உள்ளவர்களுக்கு பெரியம்மை வராது என்ற கட்டுரை எழுதி லண்டன் மருத்துவக் கழகத்திற்கு அனுப்பினார். ஆனால், அதற்கு அவரால் சரியான விளக்கம் அளிக்க முடியவில்லை.

பிறகு ஜென்னர் பெரியம்மைக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற உறுதியுடன் 20 ஆண்டுகாலம் ஆராய்ச்சி மேற்கொண்டார். அதை சோதித்துப் பார்க்க தனது தோட்டக்காரரின் மகனான ஜேம்ஸ் பிப்ஸ் என்ற எட்டு வயது சிறுவனுக்கு அம்மைக்கான தடுப்பூசி போட நினைத்தார்.

தனது பண்ணைப் பெண்ணின் கையிலிருந்த கவ் பாக்ஸ் கிருமியை எடுத்து ஊசிமூலம் அச்சிறுவனின் உடலுக்குள் செலுத்தி கவ் பாக்ஸ் நோயை ஏற்படுத்தினார். சிறுவனும் நோயால் தாக்கப்பட்டான். சில வாரங்கள் கழித்து பெரியம்மை கிருமியை எடுத்து அதே சிறுவன் உடலில் செலுத்தினார். ஆனால், அந்த சிறுவனை பெரியம்மை தாக்கவில்லை.

இதன்மூலம் கவ் பாக்ஸ் கிருமிகளை மேன்மைப்படுத்தி ஊசிமூலம் ஒருவரது உடலில் செலுத்தினால் அவரை பெரியம்மை தாக்காது என்பதை நிரூபித்தார்.

கோடிக்கணக்கான உயிர்களை காத்தவரும், நோய் தடுப்பூசிகளின் தந்தை என்று போற்றப்படுபவருமான எட்வர்டு ஜென்னர் 73வது வயதில் (1823) மறைந்தார்.