Type Here to Get Search Results !

அக்டோபர்21

👉 உலக அயோடின் தினம்


🌷 2003ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி குறுங்கோள் ஏரிஸின் படங்கள் எடுக்கப்பட்டன.



உலக அயோடின் தினம்

🌷 உலக அயோடின் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அயோடின் பற்றாக்குறை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

🌷 அயோடின் சத்துக் குறைபாட்டால் இளம் வயதினரின் அறிவுத்திறன் பாதிக்கப்படும். பெரியவர்களுக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்படும். எனவே தினமும் அயோடின் கலந்த உப்பினைப் பயன்படுத்த வேண்டும் என்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.



ஆல்ஃபிரட் நோபல்

🌷 நோபல் பரிசினை உருவாக்கிய ஆல்ஃபிரட் நோபல் 1833ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி சுவீடனில் பிறந்தார். இவர் 1857-ல் எரிவாயு மீட்டர் குறித்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்றார். மேலும் வெடிபொருட்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு, 1863-ல் வெடி மருந்தைக் கண்டுபிடித்தார்.

🌷 பல முயற்சிகளுக்குப் பிறகு டைனமைட்டையும், சேஃப்டி பவுடரையும் 1867-ல் இவர் கண்டுபிடித்தார். 1875-ல் பிளாஸ்டிக் ஜெலட்டினைக் கண்டுபிடித்தார். சிறிய ஆயுதங்களுக்குத் தேவைப்படும் புகை வெளியிடாத பாலிஸ்டைட் வகை கன் பவுடரையும் கண்டுபிடித்தார்.

🌷 இவர் போஃபர்ஸ் என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளரானார். இவரது நினைவாக நோபலியம் என்று ஒரு தனிமத்துக்கு பெயரிடப்பட்டது. இவர் சர்வதேச அளவில் 350 காப்புரிமைகளைப் பெற்றார்.

🌷 உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளை, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட காரணமாக இருந்த ஆல்ஃபிரெட் நோபல் தனது 63-வது (1896) வயதில் மறைந்தார்.



சுர்ஜித் சிங் பர்னாலா

🌺 தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா 1925ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி ஹரியானாவிலுள்ள அட்லியில் பிறந்தார்.

தமிழ்நாட்டின் மாநில ஆளுநராக நவம்பர் 3, 2004ஆம் ஆண்டு முதல் ஏழு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

🌺 இவர் 1942ஆம் ஆண்டு லக்னோவில் இருந்தபோது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டார். 1967ஆம் ஆண்டு பர்னாலாவில் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார்.

🌺 1969ஆம் ஆண்டு பஞ்சாப் மாநில கல்வி அமைச்சரானார். 1977ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராகி மொரார்ஜி தேசாய் தலைமையில் விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சரானார். 1985ஆம் ஆண்டு சிரோமணி அகாலி தள் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பஞ்சாப் மாநில முதல்வரானார்.

🌺 மக்களவை உறுப்பினராக 1996 மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு வேதிப்பொருட்கள், உரம் மற்றும் உணவுத்துறை அமைச்சரானார். அதிக ஆண்டுகள் ஆளுநராக இருந்தவர்களில் ஒருவரான சுர்ஜித் சிங் பர்னாலா தனது 91வது வயதில் மறைந்தார்.



முத்துசுவாமி தீட்சிதர்

🌷 இசை மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படும் முத்துசுவாமி தீட்சிதர் 1775ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி திருவாரூரில் பிறந்தார்.

🌷 சிறுவயதிலேயே வேதம், சாஸ்திரம், தர்க்கம், வியாகரணம் (இலக்கணம்), காவியம் ஆகிய அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். திருவாரூர் கோவிலில் உள்ள அனைத்து கடவுள்கள் மீதும் பாடல் இயற்றியுள்ளார்.

🌷 இவர் முருகனையே தன் குருவாக நினைத்தார். இவரது பாடல்களில் குருகு என்ற வார்த்தை இல்லாமல் இருக்காது. தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதத்தில் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.

🌷 பஞ்ச பூதங்கள், தெய்வங்கள், நவகிரகங்கள், புண்ணிய தீர்த்தங்கள், மொழிகள், மாயை குறித்து பாடல்கள் இயற்றியுள்ளார். நவாவர்ணக் கீர்த்தனைகள், பஞ்சலிங்க ஸ்தல கிருதிகள், கமலாம்பா நவாவர்ணம், அபயாம்பா நவாவர்ணம் உள்ளிட்ட பல கீர்த்தனைத் தொகுப்புகளை இயற்றியுள்ளார்.

🌷 இவர் 72 மேளகர்த்தா ராகங்களிலும் கீர்த்தனை இயற்றியுள்ளார். வறட்சி நிலவிய கிராமத்தில் அமிர்தவர்ஷினி ராகத்தில் கீர்த்தனை பாடி மழையை வரவழைத்தார் என்று கூறப்படுகிறது. இதனால் அமிர்தவர்ஷினி ராகத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார்.

🌷 அரிதான, அதிகம் பயன்படுத்தப்படாத ராகங்களிலும்கூட கீர்த்தனைகள் பாடிய முத்துசுவாமி தீட்சிதர் தனது 60வது வயதில் 1835ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி மறைந்தார்.