Type Here to Get Search Results !

ஆகஸ்ட் 27

👉 டி.என்.ராஜரத்தினம் பிள்ளை பிறந்த தினம்

👉 ரோலண்ட் ஹில் நினைவு தினம்


🌷 1939ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி உலகின் முதல் ஜெட் விமானமான ஹென்கெல் ஹி 178 சேவைக்கு விடப்பட்டது.

☉ 1757ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் இந்திய நாணயம் கல்கத்தா நகரில் தயாரிக்கப்பட்டது.

📗 1955ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் கின்னஸ் புத்தகம் 198 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது.

🌷 1859ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி பென்சில்வேனியாவின் டிட்டுஸ்வில் என்ற இடத்தில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது.


டி.என்.ராஜரத்தினம் பிள்ளை

🌷 அகில உலக நாதஸ்வர சக்ரவர்த்தி என்ற பட்டம் பெற்றவரும், இணையற்ற நாதஸ்வர வித்வானாகத் திகழ்ந்தவருமான டி.என்.ராஜரத்தினம் பிள்ளை 1898ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருமருகல் என்ற ஊரில் பிறந்தார்.

🌷 இவரது முதல் நாதஸ்வர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவரின் இசையை ரசிகர்கள் மெய்மறந்து கேட்டனர். முதல் கச்சேரியே அபாரமான வெற்றி அடைந்தது. அதன் பின் பல இடங்களில் கச்சேரிகள் நடைபெற்றன.

🌷 'நாதஸ்வர சக்ரவர்த்தி' என்று அழைக்கப்பட்ட இவர், பெயரில் மட்டுமல்லாமல் நிஜமாகவே ஒரு ராஜாவைப் போல வாழ்ந்தவர். இலங்கை, மலேசியா நாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். 'மிஸ் கமலா', 'கவி காளமேகம்' ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

🌷 'சங்கீத அகாடமி விருது', 'அகில உலக நாதஸ்வர சக்ரவர்த்தி' உள்ளிட்ட ஏராளமான பட்டங்களும் விருதுகளும் பெற்றுள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த நள்ளிரவில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் இவரது மங்கல இசை தான் ஒலித்தது.

🌷 ஏவி.எம். செட்டியார், பல மணி நேரம் இவர் இசைத்த 'தோடி' ராகத்தைப் பதிவு செய்து ஆறரை மணி நேர இசைத்தட்டை வெளியிட்டார். இது உலகம் முழுவதும் விற்பனையாகி சாதனை படைத்தது. ஈடு இணையற்ற நாதஸ்வரக் கலைஞர் என்று போற்றப்பட்ட டி.என். ராஜரத்தினம் பிள்ளை 1956-ல் 58-ம் வயதில் மறைந்தார்.


ரோலண்ட் ஹில்

🌷 நவீன அஞ்சல் சேவையை கண்டுபிடித்த ரோலண்ட் ஹில் 1795ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். அப்பொழுது தபால்களைப் பெறுபவர்கள்தான் கட்டணத்தைச் செலுத்தும் நடைமுறை இருந்தது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரேமாதிரியான ஃபோர் பென்னி போஸ்ட் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்து நாடாளுமன்றமும் இதற்கு ஒப்புதல் அளித்தது.

🌷 இதன்படி, பணம் கொடுத்து ஸ்டாம்ப் வாங்கி, தபாலில் ஒட்டும் பழக்கம் 1839ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. கட்டணம் செலுத்தி தபாலை பெறும் நடைமுறையை முடிவுக்கு கொண்டுவந்து, ஏழை எளியவர்களும் தபால் சேவையை பெறச் செய்தார். முதல் தபால்தலைகள் 1840ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தன. ஓய்வு பெறும்வரை தபால் துறையில் பல மாற்றங்களைச் செய்த ரோலண்ட் ஹில் 1879ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி தனது 83வது வயதில் (1879) மறைந்தார்.