Type Here to Get Search Results !

செப்டம்பர் 5

👉 ஆசிரியர் தினம்

👉 சர்வதேச கருணை தினம்

👉 டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினம்

👉 வ.உ.சிதம்பரம்பிள்ளை பிறந்த தினம்

👉 அன்னை தெரசா நினைவு தினம்


🌷 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி வளமான கற்பனை, எளிய நடை என்று மக்கள் உள்ளத்தை கவர்ந்த கவிஞர் மு.மேத்தா தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தார்.

🌷 1961ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி அணிசேரா நாடுகளின் முதலாவது மாநாடு பெல்கிரேட்டில் இடம்பெற்றது.

🌷 1980ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி உலகின் மிக நீளமான நெடுஞ்சாலைச் சுரங்கமான கோதார்ட் சாலைச் சுரங்கம் (16.224 கி.மீ) சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டது.


சர்வதேச கருணை தினம்

சர்வதேச கருணை தினம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக வளரும் நாடுகளில் வறுமை, பொருளாதாரம் மற்றும் கலாச்சார பிரச்சனைகளால் மக்கள் அவதியுறுகின்றனர். இவர்களின் துயரங்களை மனிதாபிமான அடிப்படையில் துடைக்க வேண்டும் என்றும், வாழ்நாள் முழுவதும் சேவை செய்து வந்த அன்னை தெரசாவின் நினைவு தினத்தை நினைவுகூறும் வகையிலும் இத்தினம் ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டது.


டாக்டர் ராதாகிருஷ்ணன்

நாட்டின் 2-வது ஜனாதிபதியும், தத்துவ மேதையுமான டாக்டர் ராதாகிருஷ்ணன் 1888ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி திருத்தணி அருகேயுள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரை போற்றும் விதத்தில் செப்டம்பர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

1923-ல் இந்திய தத்துவம் என்ற இவரது நூல் வெளியானது. இது, பாரம்பரிய தத்துவ இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாகப் போற்றப்படுகிறது. பாடங்கள் தவிர, உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரம் ஆகியவற்றையும் மாணவர்களுக்கு போதித்தார்.

இவரைப் பார்த்து நீங்கள் எனக்கு கண்ணன் மாதிரி. நான் அர்ஜுனனாக உங்களிடம் பாடம் கேட்க விரும்புகிறேன் என்றாராம் காந்தி. அனைவருக்கும் ஆசிரியர் போன்றவர் ராதாகிருஷ்ணன். அவரிடம் கற்க ஏராளமான விஷயங்கள் உள்ளன என்று நேரு புகழ்ந்துள்ளார்.

நாட்டின் முதல் குடியரசு துணைத் தலைவராக 1952-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அப்பதவியை 2 முறை வகித்தார். நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது 1954-ல் வழங்கப்பட்டது. ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த இவர் தனது 87-வது வயதில் (1975) மறைந்தார்.


வ.உ.சிதம்பரம்பிள்ளை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி 1872ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் பிறந்தார். இவரின் முழுப்பெயர் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை.

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை ஒழிக்க எண்ணிய வ.உ.சி. 1906 அக்டோபர் 16ஆம் தேதி சுதேசிக் கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். நிறுவனத்தின் தலைவராகப் பாண்டித்துரைத் தேவரும், வ.உ.சி செயலராகவும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

வ.உ.சி விடுதலைப் போரில் தீவிரப் பங்கு எடுத்ததைப் போல் தமிழுக்கும் புகழ்மிக்க தொண்டு செய்துள்ளார். திருவள்ளுவரின் திருக்குறளுக்கு எளிய உரை எழுதி வெளியிட்டார். 1936ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி சிதம்பரனார் இயற்கை எய்தினார்.



அன்னை தெரசா

🌷 அன்னை தெரசா 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி ஓட்டோமான் பேரரசிலுள்ள அஸ்கபில் (தற்போது மாக்கடோனியக் குடியரசின் ஸ்கோப்ஜே) பிறந்தார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும்.

🌷 1950ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர்.

🌷 1970ஆம் ஆண்டுக்குள் இவர் சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார். இவர் 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980-ல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார்.

🌷 அன்னை தெரசா 1997ஆம் ஆண்டு செம்டம்பர் 5ஆம் தேதி தன்னுடைய 87-வது வயதில் மறைந்தார். அன்னை தெரசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது.