Type Here to Get Search Results !

டிசம்பர்6

👉 பி.ஆர்.அம்பேத்கர் நினைவு தினம்


🌷 புகழ்பெற்ற திரைப்பட நடிகை சாவித்திரி 1935ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஆந்திரப் பிரதேசம் குண்டூரில் உள்ள சிறாவூரில் பிறந்தார்.


மாக்ஸ் முல்லர்

🌷 பண்டைய இந்திய தத்துவ இலக்கியம் பற்றி ஆராய்ச்சி செய்த ஜெர்மனி மொழியியலாளர் பிரெடரிக் மாக்ஸ் முல்லர் 1823ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.

🌷 இவர் சிறுவயதிலிருந்தே இசை மற்றும் கிரேக்கம், லத்தீன், அராபி, பாரசீகம், சமஸ்கிருதம் போன்ற பல மொழிகளை கற்றார். இவர் பன்முகத்தன்மை கொண்டவர். கிழக்கத்தியப் புனித நூல்கள் இவரது வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டது. இது விக்டோரியா காலத்தின் ஆய்வு முயற்சியின் நினைவு சின்னமாகும்.

🌷 ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் வெளியிட வாழ்நாளில் பாதியை செலவிட்டார். அதன் கையெழுத்துப் பிரதியை தயாரிக்க 25 ஆண்டுகளும், அச்சிட மேலும் 20 ஆண்டுகளும் ஆயிற்று.

🌷 இந்திய தத்துவத்தின் ஆறு மரபுகள் இவரது புகழ்பெற்ற மற்றொரு நூலாகும். இந்தியர்கள் தங்களது பண்டைய இலக்கியத்தை கல்வியின் ஒரு அம்சமாக கற்க வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் தேசிய பெருமிதமும், சுயமரியாதையும் விழித்தெழும் என்று கூறியுள்ளார்.

🌷 இந்திய மக்களின் மீது மிகுந்த பற்றும், மதிப்பும் கொண்டிருந்தார். 'இந்தியா அழகு நிறைந்த பூலோக சொர்க்கம்' என்று போற்றிய இவர் 76வது வயதில் (1900) மறைந்தார்.


டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

🌷 இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கும் அம்பேத்கர் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (தற்போது மத்தியபிரதேசம்) என்ற இடத்தில் பிறந்தார்.

🌷 இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்ததால் பலமுறை துயரங்களை அனுபவித்தார். ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற ஆசிரியர் இவர் மீது பாசமாக இருந்ததால் பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர் என்ற பெயரை, பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார்.

🌷 உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவர். பிறகு 1923ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த பிறகு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா என்ற அமைப்பை நிறுவினார்.

🌷 1930ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றிக்கண்டார்.

🌷 தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடுஇணையற்ற ஜோதியாய் விளங்கிய பி.ஆர்.அம்பேத்கர் தனது 65வது வயதில் 1956ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி மறைந்தார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1990ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.