Type Here to Get Search Results !

நவம்பர் 8

👉 வீரமாமுனிவர் பிறந்த தினம்

👉 உலக நகர திட்டமிடல் தினம்

👉 சர்வதேச கதிரியக்கவியல் தினம்


🌷 1895ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி வில்ஹெம் ராண்ட்ஜன் என்பவர் எக்ஸ்-கதிர்களை கண்டுபிடித்தார்.

🌷 1923ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ஒருங்கிணை சுற்றுகள் (இன்டகிரேடட் சர்க்யூட் ஐ.சி.) உருவாக்க முன்னோடியாக இருந்த ஜாக் செயின்ட் கிளேர் கில்பி அமெரிக்காவின் மிஸோரி மாநிலம் ஜெபர்சன் நகரில் பிறந்தார்.

🌷 2009ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ஹைட்ரஜன் குண்டை உருவாக்கியவர்களில் ஒருவரான வித்தாலி கீன்ஸ்புர்க் மறைந்தார்.


உலக நகர திட்டமிடல் தினம்

🌷 உலக நகர திட்டமிடல் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஒரு நகரத்தை உருவாக்கும்போது, எதிர்காலத்திற்கு ஏற்ப திட்டமிட வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. இத்தினத்திற்கான அமைப்பு 1949ஆம் ஆண்டு பேராசிரியர் Carlos Maria della Paolera என்பவரால் நிறுவப்பட்டது.


சர்வதேச கதிரியக்கவியல் தினம்

🌷 இன்றைய நவீன மருத்துவத் துறையில் மருத்துவப் படிமவியலின் சிறப்பினை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்ல ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 8ஆம் தேதி சர்வதேச கதிரியக்கவியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

🌷 மேலும் வில்ஹெம் ராண்ட்ஜன் என்பவர் 1895ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி எக்ஸ்-கதிர்களை கண்டுபிடித்தார். எக்ஸ்-கதிர்களை கண்டுபிடித்த தினத்தின் நினைவாக 2012ஆம் ஆண்டுமுதல் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


வீரமாமுனிவர்

🌷 மகத்தான தமிழ் அறிஞர் வீரமாமுனிவர் 1680ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார். கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தனது இயற்பெயரை முதலில் தைரியநாதன் என்று மாற்றிக் கொண்டார். பிறகு அதுவும் சமஸ்கிருதம் என்று அறிந்து வீரமாமுனிவர் என்று மாற்றிக்கொண்டார்.

🌷 இவர் இலக்கணம், இலக்கியம், அகராதி ஆகியவற்றை படைத்தார். திருக்குறளை லத்தீன் மொழியிலும் மற்றும் தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகியவற்றை பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் மொழிப்பெயர்த்து வெளியிட்டார்.

🌷 தொன்னூல் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களை தொகுத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழ் மொழியில் முதன்முதலாகப் பேச்சுத்தமிழை விவரித்தார்.

🌷 இவர் இயேசு காவியமான தேம்பாவணியை இயற்றியுள்ளார். இவர் தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார். தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்த வீரமாமுனிவர் 1747ஆம் ஆண்டு தன்னுடைய 66வது வயதில் மறைந்தார்.


துவாரம் வெங்கடசாமி நாயுடு

🌺 பிரபல வயலின் கலைஞர் துவாரம் வெங்கடசாமி நாயுடு 1893ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்தார். இவருக்கு வயலின் வாசிப்பதில் இருந்த ஆர்வத்தை அறிந்த இவரின் அண்ணன், தானே முதல் குருவாகி தம்பிக்கு கற்றுக்கொடுத்தார்.

🌺 இவரது இசை ஞானத்தை வளர்க்க வீணை சேஷண்ணா, சங்கமேஸ்வர சாஸ்திரி, கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர் உள்ளிட்ட பிரபல வித்வான்களின் கச்சேரிகளுக்கு அழைத்துச் சென்றார். அவற்றை கேட்டும், பயிற்சி செய்தும் தன் இசை ஞானத்தை பட்டை தீட்டிக்கொண்டார் வெங்கடசாமி.

🌺 சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி, பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். ஆந்திர பல்கலைக்கழகம் 'கலா ப்ரபூர்ண' என்ற கௌரவ முனைவர் பட்டம் வழங்கி இவரை சிறப்பித்தது. இப்பட்டம் பெற்ற முதல் இசைக் கலைஞர் இவரே. இவர் தன்னுடைய 71வது வயதில் (1964) மறைந்தார்.