Type Here to Get Search Results !

பிப்ரவரி 13

👉 உலக வானொலி தினம்

👉 சரோஜினி நாயுடு பிறந்த தினம்


🌷 1987ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் மறைந்தார்.

🌷 1950ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி தமிழ்ப் பெரும் புலவர் செய்குத்தம்பி பாவலர் மறைந்தார்.


உலக வானொலி தினம்

🌷 ஐக்கிய நாடுகள் சபையில் 1946ஆம் ஆண்டு வானொலி நிறுவப்பட்டது. யுனெஸ்கோவின் 36வது பொதுச்சபை கூட்டத்தில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி உலக வானொலி தினமாக அறிவிக்கப்பட்டது. பிறகு 2012ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13ஆம் தேதியை உலக வானொலி தினமாக அறிவித்தது.

🌷 வானொலி ஒலிபரப்பு சேவையை கொண்டாடவும், பல நாட்டு வானொலியாளர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாறிக் கொள்வதனை ஊக்குவிப்பதற்கும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.


சரோஜினி நாயுடு

🌷 இந்தியாவின் 'கவிக்குயில்' என்று அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு 1879ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தார்.

🌷 இவருக்கு சிறுவயதில் இருந்தே கவிதை எழுதுவதில் நாட்டம் அதிகம். இவரது படைப்புகளால் கவரப்பட்ட ஹைதராபாத் நிஜாம், வெளிநாடு சென்று படிக்க உதவித்தொகை வழங்கினார்.

🌷 இவர் எழுதிய The Golden Threshold, The Bird of Time, The Broken Wing ஆகிய புத்தகங்கள் குறிப்பிடத்தக்கவை. 1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின்போது இந்திய தேசிய சுதந்திர இயக்கத்தில் இணைந்தார்.

🌷 1925ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்திஜி இவரை செல்லமாக 'மிக்கி மவுஸ்' என்பார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, இவர் உத்தரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேலும், முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் பெற்றார்.

🌷 பெண்களுக்கு பெருமை சேர்த்த சரோஜினி நாயுடு 70வது வயதில் (1949) மறைந்தார். 20ம் நூற்றாண்டின் இணையற்ற பெண்மணிகளில் ஒருவராக திகழ்ந்த இவரது பிறந்தநாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.


பாலு மகேந்திரா

🌷 இந்தியத் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா 1939ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தார். இயற்பெயர் மகேந்திரா.

🌷 இவருடைய பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை செம்மீன் படப்புகழ் ராமு காரியத் அவரது நெல்லு படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.

🌷 பிறகு 1977ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான கோகிலாவை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977-லிலும், தமிழில் அவரது முதல் படமான அழியாத கோலங்கள் 1978-லிலும் வெளியானது.

🌷 சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு என இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் இவரே.

🌷 சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கிய இவர் தனது 74வது வயதில் 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி மறைந்தார்.