Type Here to Get Search Results !

அக்டோபர்28

👉 சர்வதேச அனிமேஷன் தினம்


🌷 1997ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி இறுதிவரை இசைத் தொண்டாற்றி வந்த இசைக்கலைஞர் மைசூர் வி.துரைசுவாமி மறைந்தார்.

🌷 1972ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி முதலாவது ஏர்பஸ் ஏ300 பறக்க விடப்பட்டது.


சர்வதேச அனிமேஷன் தினம்

🌷 சர்வதேச அனிமேஷன் தினம் அக்டோபர் 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக 'சர்வதேச அனிமேஷன் தினம்' கொண்டாடப்படுகிறது.

🌷 1892ல் சார்லெஸ் எமிலி ரெனால்ட் என்பவர் முதன்முதலில் கிரெவின் மியூசியத் திரையரங்கு ஒன்றில் அனிமேஷன் திரைப்படத்தை திரையிட்டதை நினைவுகூறும் விதமாக சர்வதேச அனிமேஷன் தினம் அமைந்துள்ளது.

🌷 UNESCOவின் ஒரு அங்கமான, சர்வதேச அனிமேஷன் திரைப்பட சங்கம் (International Animated Film Association - ASIFA), 2002ல் இந்நாளை அறிமுகப்படுத்தியது.


பில்கேட்ஸ்

🌷 மைக்ரோசாப்ட் நிறுவனர், கணிப்பொறி மென்பொருள் வல்லுநர் பில்கேட்ஸ் 1955ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி அமெரிக்காவில் சியாட்டில் என்ற நகரில் பிறந்தார்.

🌷 இவர் உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து இருந்து வருகிறார். 1981ஆம் ஆண்டு IBM கணினிகளுக்காக MS-DOS என்ற Operating System அதாவது இயங்குதளத்தை அறிமுகம் செய்தவர் இவர் தான்.

🌷 இதுவரை பில்கேட்ஸ் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். 1995ஆம் ஆண்டு வெளியான 'தி ரோடு அஹெட்' என்ற புத்தகத்தை இவருடன் சேர்ந்து மைக்ரோசாப்ட்டின் சிறப்பு தொழில்நுட்ப அலுவலரான நாதன் முர்வால்டும், பீட்டர் ரிநீர்சன் என்ற பத்திரிக்கையாளரும் எழுதியுள்ளனர். 1999ஆம் ஆண்டு 'பிசினஸ் அட் தி ஸ்பீட் ஆப் தாட்' என்ற நூலை வெளியிட்டார்.


சகோதரி நிவேதிதா

🌷 சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும், சமூக சேவகியுமான சகோதரி நிவேதிதா 1867ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி அயர்லாந்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபிள்.

🌷 ஒருமுறை தோழியின் வீட்டில் சுவாமி விவேகானந்தரின் உரையைக் கேட்டார். அதில் கவரப்பட்டவர், அவரது பேச்சுகளை அடிக்கடி கேட்கத் தொடங்கினார். அவர்தான் தன் குரு என்று தீர்மானித்தார்.

🌷 ஒரு சமயம் இந்தியப் பெண்களின் நிலை பற்றி பேசிக் கொண்டிருந்த விவேகானந்தர், 'எங்கள் தேசத்துப் பெண்கள் கல்வி பெற நீ உதவ முடியும் என நம்புகிறேன்' என்றார். இதை அரிய வாய்ப்பாகக் கருதியவர், உடனே புறப்பட்டு இந்தியா வந்தார்.

🌷 வந்தே மாதரம் தேசியப் பாடலாக அங்கீகரிக்கப்படாத காலகட்டத்திலேயே அதை தன் பள்ளியில் காலை வணக்கப் பாடலாகப் பாடச் செய்தார். பெண் உரிமைக்காகப் போராடத் தூண்டுகோலாக இருந்த இவரை தன் குருவாக குறிப்பிட்டுள்ளார் பாரதியார். சகோதரி நிவேதிதா 43-வது வயதில் (1911) மறைந்தார்.


மாக்ஸ் முல்லர்

🌷 பண்டைய இந்திய தத்துவ இலக்கியம் பற்றி ஆராய்ச்சி செய்த ஜெர்மனி மொழியியலாளர் பிரெடரிக் மாக்ஸ் முல்லர் 1823ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.

🌷 இவர் சிறுவயதிலிருந்தே இசை மற்றும் கிரேக்கம், லத்தீன், அராபி, பாரசீகம், சமஸ்கிருதம் போன்ற பல மொழிகளை கற்றார். இவர் பன்முகத்தன்மை கொண்டவர். கிழக்கத்தியப் புனித நூல்கள் இவரது வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டது. இது விக்டோரியா காலத்தின் ஆய்வு முயற்சியின் நினைவு சின்னமாகும்.

🌷 ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் வெளியிட வாழ்நாளில் பாதியை செலவிட்டார். அதன் கையெழுத்துப் பிரதியை தயாரிக்க 25 ஆண்டுகளும், அச்சிட மேலும் 20 ஆண்டுகளும் ஆயிற்று.

🌷 இந்திய தத்துவத்தின் ஆறு மரபுகள் இவரது புகழ்பெற்ற மற்றொரு நூலாகும். இந்தியர்கள் தங்களது பண்டைய இலக்கியத்தை கல்வியின் ஒரு அம்சமாக கற்க வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் தேசிய பெருமிதமும், சுயமரியாதையும் விழித்தெழும் என்று கூறியுள்ளார்.

🌷 இந்திய மக்களின் மீது மிகுந்த பற்றும், மதிப்பும் கொண்டிருந்தார். 'இந்தியா அழகு நிறைந்த பூலோக சொர்க்கம்' என்று போற்றிய இவர் 76வது வயதில் 1900ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி மறைந்தார்.